Main Menu

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்துக்கு விரைந்த முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம்!

ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவில், டைக்ரே பிராந்தியத்தின் தலைநகருக்கு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம் விரைந்துள்ளது.

கடந்த மாதம் சண்டை வெடித்ததில் இருந்து முதல் அரசு சாரா உதவிப் பிரிவு, எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயின் தலைநகருக்கு வந்துள்ளது.

மெக்கல்லே நகரத்திற்கு வந்த ஏழு வெள்ளை லொரிகளின் பயணத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) மற்றும் எத்தியோப்பியன் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் பிற பொருட்களை அனுப்பியுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் ஐக்கிய நாடுகள் சபையும் பிற நிறுவனங்களாலும் உதவி வழங்க முடியவில்லை.

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ‘டைக்ரேயன்ஸ்’ எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.

இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.

இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது மற்றும் 950,000பேர் இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது.

பகிரவும்...