Main Menu

நீர்நிலைகளைப் பாதுகாக்க றோயல் கடற்படைக் கப்பல்களை நிறுத்துகிறது இங்கிலாந்து!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், பிரித்தானியா மற்றும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் மீன்பிடி நீர் நிலைகளைப் பாதுகாக்க நான்கு றோயல் கடற்படை ரோந்துக் கப்பல்களை ஜனவரி முதலாம் திகதி முதல் கண்காணிப்பில் ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 80 மீற்றர் நீளமுள்ள கடற்படைக் கப்பல்கள் இங்கிலாந்தின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) செயற்படும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடிப் படகுகளை நிறுத்தி சோதனை செய்யவும், கடலில் இருந்து 200 கடல் மைல் (370 கி.மீ) நீளத்தை கண்காணிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான இங்கிலாந்து, மீன்பிடி நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கு றோயல் கடற்படை துப்பாக்கிப் படகுகளை நிறுத்துவது இழிவான செயல் என கென்சர்வேற்றிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய நோக்கமாக குறித்த மீன்பிடி நீர்நிலைப் பிரச்சினை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...