Main Menu

உழவர்களை சிறப்பிக்கும் பொங்கல் திருநாள்

தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருவிழாதமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் திருநாள் தொடர்ந்து 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் தைப் பொங்கல், 2-வது நாள் மாட்டுப் பொங்கல், கடைசியாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 
தமிழர் திருநாளான இதனை உலகத்தில் உள்ள அனைத்து தமிழின மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு, வீடுகள்தோறும் தித்திக்கும் செங்கரும்பு கட்டியும், பொங்கல் பானையில் மஞ்சள் கொத்து கட்டியும், பச்சரிசி, வெல்லம், நெய், திராட்சை, முந்திரியிட்டும், பால் ஊற்றியும் சூரிய பகவானை நோக்கி படைக்கப்படுகிறது. பானையில் பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று உரக்க உச்சரிக்கப்படுகிறது.
பின்னர் சாமிக்கு படைக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கும், பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் பொங்கல் கொடுத்து உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் வயல்வெளிகளில் பொங்கல் வைத்து அடுத்த ஆண்டு இதைவிட அதிக மகசூல் தர வேண்டும் என்று சூரிய பகவானை நோக்கி வேண்டிக் கொள்கின்றனர். பொங்கல் திருநாள் அன்று இளைஞர்கள் தங்கள் தெருக்களில் பல்வேறு போட்டிகளை நடத்தி உற்சாக கொண்டாடுகின்றனர்.

2-வது நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். இந்த விழா கிராமப்புறங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைத்த மாடுகளை சிறப்பிக்கும் வகையில் அவைகளை குளிக்க வைத்து கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்தி மஞ்சள், குங்குமம் வைத்து அவைகளுக்கு கரும்பு, பொங்கல் கொடுத்து வணங்குகின்றனர். இந்நாளில் மாடுகளை வண்டியில் பூட்டாமல் கோவிலுக்கு அழைத்து சென்று வேண்டிக் கொள்வார்கள். அன்றைய தினம் பல்வேறு கிராமங்களில் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டும் நடத்தப்படுகிறது.
3-வது நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார், உறவினர்களை தங்களது இல்லங்களுக்கு அழைத்து சிறப்பித்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க குடும்பங்களுடன் அழைத்து செல்லப்படுகின்றனர். முக்கியமாக கோவில்களுக்கும், கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்நாட்களில் நமக்கு உணவளித்த உழவர்களையும், மாடுகளையும் சிறப்பிப்போம்.

பகிரவும்...