Main Menu

போகிப் பண்டிகை நிகழ்வு: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரிப்பது வேடிக்கை.

குறித்த சம்பிரதாயம் காலப்போக்கில் குளிருக்காக பழைய டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிக்கும் பழக்கமாக மாறியது.

இதனால் காற்றில் மாசு கலந்தது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை மூலமாக இதை கட்டுப்படுத்தி வருகிறது.

சாதாரண மரத்தாலான பொருட்கள், பேப்பர்கள், துணிகள் போன்ற பயனில்லாத பொருட்களை மட்டுமே எரிக்கவேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று போகி பண்டிகைக்கு பொருட்களை எரித்தது, பனி மூட்டம் காரணமாக துகள்கள் கரையாமல் காற்றில் மாசு அதிகரித்தது. மேலும் பனிமூட்டமும் இருந்ததால் எதிரில் வருபவர்கூட தெரியாத அளவுக்கு நிலை மாறியது.

சென்னை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் காற்று மாசு அதிகமாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு என்பது 100க்குள் இருக்கவேண்டும். அதை தாண்டினால் பல சுவாசப்பிரச்சினைகள் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் மணலியில் அதிகப்பட்சமாக 795 குறியீடுகளாக இருந்தது பதிவாகியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

பகிரவும்...