Main Menu

உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை!

உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சுவிஸ்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றன் மூலம் உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

கடந்த 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் உலக பேட்மிண்டன் சம்பியன்pப் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் சிந்துவால் இரண்டாவது இடமே பிடிக்க முடிந்தது.

இம்முறை மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் தடம் பதித்த சிந்து இம்முறை தங்கப்பதக்கம் வென்றே ஆக வேண்டுமென்ற முனைப்பில் களமிறங்கினார்.

இரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே ஆக்ரோம் கலந்த அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 21-7 என எளிதாக கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடிய சிந்து இந்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி அதையும் 21-7 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தார்.

சரித்திர வெற்றியை பதிவு செய்த பி.வி. சிந்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சிந்துவின் இரசிகர்களும் தற்போது சமூக வலைதளங்களின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.

அதே போன்று கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை.

2018ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி தங்க பதக்கம் வெல்லவும் முக்கிய பங்கு வகித்தார்.

இதுவரை இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் வெற்றி மங்கை என வர்ணிக்கப்பட்ட சிந்து தற்போது தங்க மங்கை என வர்ணிக்கப்படுகிறார்.

பிரபல போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு அதிக வருமானம் ட்டும் 7ஆவது வீராங்கனையாக பி.வி. சிந்து இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...