Main Menu

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? – அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோத உள்ளன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும். மெஸ்சியின் கடைசி உலக கோப்பை போட்டி இது என்பதால் கோப்பையை கையில் ஏந்துவாரா என அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...