Main Menu

இன்று முதல் 4 ஆட்டங்கள்- அர்ஜென்டினா, பிரான்ஸ் வெற்றியுடன் தொடங்குமா?

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று முதல் 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. லுசாயில் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 2 முறை சாம்பியனான அந்த அணி உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. 18-வது உலக கோப்பையில் விளையாடும் அர்ஜென்டினா அணி சவுதியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதிய 4 ஆட்டத்தில் அர்ஜென்டினா இரண்டில் வெற்றி பெற்றது. 2 போட்டி ‘டிரா’ ஆனது. 80 ஆயிரம் ரசிகர்கள் அமரும் ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் ‘டி’ பிரிவில் உள்ள டென்மார்க்-துனிசியா அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த டென்மார்க் தர வரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 30-வது இடத்தில் இருக்கிறது. டென்மார்க் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. துனிசியா ‘டிரா’ செய்யும் வகையில் விளையாடும். அல்ரேயானில் உள்ள எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது. இரு அணியும் இதற்கு முன்பு ஒரு முறை மோதிய ஆட்டத்தில் டென்மார்க் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு தோகாவில் உள்ள ஸ்டேடி யம் 974-ல் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் உள்ள மெக்சிேகா-போலந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 8 ஆட்டத்தில் மோதியுள்ளன. மெக்சிகோ 3 ஆட்டத்திலும், போலந்து 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி ‘டிரா’ ஆனது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அல்வராகாவில் உள்ள அல் ஜனோபா மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. பிரான்ஸ் அணி பல வீனமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும். அந்த அணி தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 38-வது வரிசையில் உள்ளது. இரு அணிகள் மோதிய 5 போட்டியில் பிரான்ஸ் 3-ல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் ‘டிரா’ ஆனது.

பகிரவும்...