Main Menu

ஜோஸ் பட்லர் சதம்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி!

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 29ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதுவே அவரது முதல் ரி-20 சதமாகும். இதன்மூலம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மோர்கன் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்கள் நிறைவில் 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஸ மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மொயின் அலி, அடில் ராஷித் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 67 பந்துகளில் 6 சிக்ஸர்களையும் 6 பவுண்ரிகளையும் விளாசி, ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

பகிரவும்...