Main Menu

உலக தாதியர் தினம் இன்று…!

உலகமே கொரோனாவின் பிடியில் உள்ள சூழலில், உலக தாதியர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகையே முடக்கிப் போட்ட கொரோனா வைரஸினால் இவர்களது சேவையை முடக்க முடியவில்லை. இந்த சூழலிலும் தாயைப் போன்று நோயாளிகளை கவனித்துவரும் தாதியர்களால் தான் உலகமே தற்போது புத்துயிர் பெற்றுவருகின்றது.

இந்த ஆண்டு உலக தாதியர் தினம், உலக ஆரோக்கியத்திற்கான சேவை ஆண்டாக கடைபிடிக்கப்படுகின்றது. எத்தனையோ இன்னல்களை சந்தித்தாலும், ஒரு தாய் தன் பிள்ளைகளை காப்பது போல தாதியர்கள் தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சர்வதேச தாதியர் தினம் மற்றும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு விழாவையொட்டி, உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கூட்டாளர்களுடன் இணைந்து சுகாதாரத் துறையில் தாதியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டுவருவதற்காக உலக சுகாதார அமைப்பு 2020 ஆம் ஆண்டினை தாதியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டு என அறிவித்துள்ளது.

அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட் 1953 ஆம் ஆண்டில் ஜனாதிபதி டுவைட் டி ஐசனோவருக்கு “தாதியர் தினத்தை” அறிவிக்க முன்மொழிந்தார்.

ஆனால் ஜனாதிபதி ஐசனோவர் அவரது கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் சர்வதேச தாதியர் சபை 1965 முதல் இந்த நாளைக் கொண்டாடுகிறது. ஜனவரி 1974 இல், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் நினைவாக சர்வதேச தாதியர் தினமாக கொண்டாட மே 12 தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...