Main Menu

உலக சுகாதார அமைப்பின் தலைவர் மீது எத்தியோப்பியா குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் டெட்ரோஸ் அதனோம் மீது, எத்தியோப்பியா குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளது.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரெஸ் அதனோம், தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாணத்துக்கு ஆதரவாக, பிற நாடுகளில் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக எத்தியோப்பியா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எத்தியோப்பிய இராணுவ தலைமை தளபதி பிர்ஹானு ஜூலா கூறுகையில், “டிக்ரே மாகாணத்துக்கு எதிராக எத்தியோப்பிய இராணுவம் எடுத்து வரும் தாக்குதல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு அண்டை நாடுகளிடம் டெட்ரெஸ் அதனோம் கூறி வருகிறார்.

டிக்ரே மாகாணப் படையினருக்கு ஆயுதங்களை வழங்கி உதவுமாறு அண்டை நாடுகளிடம் அவர் கேட்டு வருகிறார்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

எத்தியோப்பிய ஆளும் கட்சிக் கூட்டணியில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்த டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்), நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018ஆம் பிரதமராகப் பொறுப்பேற்ற்குப் பிறகு மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது.

இதனிடையே கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அபை அகமது தேர்தல் நடத்துவதற்கு தடை விதித்திருந்த போதும், அதனையும் மீறி டிக்ரே மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதனால், மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிக்ரே மாகாணத்திலுள்ள இராணுவ நிலையொன்றின் மீது டிபிஎல்எஃப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த 4ஆம் திகதி குற்றம் சாட்டிய அபை அகமது, மாகாணப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...