Main Menu

உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில் கொங்கோ முதலிடம்!

உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு பெயரிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இரண்டு விமான விபத்துகள் அங்கு விமானப் பாதுகாப்பு குறித்து அதிக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம், கொங்கோவின் கோமா நகரத்திலுள்ள வீடுகளில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 2003ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.

விமானங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நிர்வகித்து வரும் ‘ஏவியேஷன் சேப்டி நெட்ஒர்க்’ எனும் அமைப்பின் தரவுகளின்படி, 1945ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில், ஆபிரிக்காவிலேயே டி.ஆர். கொங்கோவில்தான் அதிகளவிலான விமான விபத்துகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

டி.ஆர். கொங்கோவில் அதிகளவிலான விமான விபத்துகள் நிகழ்வதற்கு அதன் வலுவற்ற விதிமுறைகள், நிலப்பரப்பு, தகுதியற்ற நிலையில் உள்ள விமானங்கள், மிகவும் பழைய விமானங்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றமை அதிதீவிர மழை, புயல் உள்ளிட்ட மோசமான வானிலை பேன்ற பல்வேறு காரணங்கள் முன்னிக்கின்றன.

டி.ஆர். கொங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவிலிருந்து அந்நாட்டில் மொத்தமுள்ள 25 மாகாண தலைநகரங்களில் வெறும் நான்கிற்கு மட்டுமே தரமான வீதி மார்க்கமாக செல்ல முடியும் என்பதால், அங்கு விமானங்களின் தேவை அளவிடற்கரியது.

ஆனால் டி.ஆர். கொங்கோவிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உதவி, கண்காணிப்பு உபகரணங்கள் மோசமான நிலையில் உள்ளன. அதுமட்டுமின்றி, அந்நாட்டில் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கின்றன.

பகிரவும்...