Main Menu

உலகின் ஆபத்தான நகரமாக யேமனின் ஹோடிடா நகரம் தரப்படுத்தல்!

உலகின் ஆபத்தான நகரமாக, யேமனில் போர் நடைபெறும் பகுதியான ஹோடிடா நகரம் பெயரிடப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நகரமாக இந்த நகரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
15 சர்வதேச உதவி குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் தரகு யுத்த நிறுத்த உடன்படிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் கையெழுத்திடப்பட்டதிலிருந்து சுமார் 799 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஏமன் தொடர்ந்து கணக்கிடமுடியாத மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

யேமன் முழுவதிலும் இந்த ஆண்டு இதுவரை 1,008 பொதுமக்கள் ஆயுத வன்முறையால் கொல்லப்பட்ட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட 2,049 பேரில் இருந்து குறைந்துவிட்டாலும், அந்த நாடு இன்னும் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியாக உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், ஹோடிடா நகர மக்கள் தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்து வருவதாக கூறப்படுகின்றது.

ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் ஹோடிடாவுக்கு போர்நிறுத்தம் மற்றும் 15,000இற்க்கும் மேற்பட்ட கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும். ஆனால் இந்த ஒப்பந்தம் ஒருபோதும் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.

தென்மேற்கு ஆசிய நாடான யேமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சௌவுதி அரேபியா செயறபடுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு யேமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், யேமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

யேமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக, பத்து மில்லியன் மக்கள் பட்டினியையும், ஏழு மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டையும் எதிர்கொண்டுள்ளனர்.

இதுதவிர, 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நாடு முழுவதும் 390,000 யேமன்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பகிரவும்...