Main Menu

உதயசூரியனில் போட்டியிட மாட்டோம்: மதிமுக

மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடாது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வரும் திமுக, இதுவரை தங்களது கூட்டணியில் நான்கு கட்சிகளுக்கு சீட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரமும் கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்குத் தலா இரண்டு சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. மதிமுகவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் தரப்பட்டது. இந்நிலையில், ஆனால் இம்முறை ஒரே ஒரு மக்களவை சீட் மட்டுமே தரப்படும் எனவும் அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக விருப்பம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன. இதுவே இழுபறிக்கான காரணம் எனவும் சொல்லப்பட்டது.

இதனிடையே உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடாது என மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் கூறினார். 2019ஆம் ஆண்டு போல் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடத்தை மீண்டும் ஒதுக்குவதில் என்ன பிரச்னை என திமுகவிடம்தான் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படியாக தொகுதி ஒதுக்கீடு உடன்பாட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

பகிரவும்...