Main Menu

உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை – தோப்பூரில் கமல் பிரசாரம்

நான் பேசியதை முழுமையாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். நான் சரித்திர உண்மையை தான் பேசினேன் என இந்துக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அதை நான் ஒருமுறை தான் கூறினேன். ஆனால் ஊடகங்கள் 200 முறைக்கு மேல் சொல்லி விட்டார்கள்.
அரவக்குறிச்சியில் நான் பேசியதை சரியாக கேட்காமல் நான் கலகத்தை விளைவிக்கிறேன் என என் உள்மனதை புண்படுத்துகிறார்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்துக்கள். அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசமாட்டேன்.

என்னை நான் தலைவராக பார்த்துக் கொண்டதே இல்லை. என்னை பல இடங்களில் கையெடுத்து கும்பிடுகிறார்கள். சில இடங்களில் அவமானப்படுகிறார்கள். அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை கசக்கத்தான் செய்யும். அந்த கசப்பு மருந்தாக மாறும். குற்றம் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? நம்புவது போல் குற்றம்சாட்டுங்கள். என் மீது நடவடிக்கை எடுக்க பல வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். அது ஊடக நண்பர்களுக்கம் பொருந்தும்.
மதச் செறுக்கு, ஜாதி செறுக்கு எங்கும் எடுபடாது. உண்மையே வெல்லும். தீவிரவாதி என்று தான் சொன்னேன். பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ நான் சொல்லவில்லை. நான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளேன். எனக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறுகினேன். பிரிவினை பேச மாட்டோம். 

என்னை அவமானப்படுத்த எனது கொள்கையை கையில் எடுத்தால் தோற்றுப் போவீர்கள். எனது கொள்கை நேர்மை. இது போன்ற விளையாட்டுக்கள் என்னிடம் வேண்டாம். இது அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்பதையும் சர்ச்சை ஆக்காதீர்கள்.
எந்த ஜாதியை பற்றியும், மதத்தை பற்றியும் விமர்சித்து பேசுவேன். இவர்கள் என் மக்கள் என்பதால் அந்த உரிமையில் பேசுவேன். நான் பேசியதால் யார் மனதும் புண்படவில்லை. 
இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...