Main Menu

உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக அவதானமாக இருங்கள் – வைத்தியர் யமுனாநந்தா

உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும்போது தொற்றுகின்ற நோயாக காணப்படுகின்றது.

இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம் தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாம். எனவே நாய் பூனைகளுடன் பழகுபவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். காய்ச்சல் வரும்போது உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

அதே போல யாழ் போதனா வைத்திய சாலையில் சுமார் 10 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள். டெங்கு காய்ச்சலும், இந்த மழையுடன் அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

அத்துடன் சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனினும் மலேரியா நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதனால், இலங்கையில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு.

ஆனால் வெளிநாடுகளில் இருந்து அதாவது மலேரியா தொற்று உள்ள நாடுகளில் இருந்து இங்கு வருவோர் கட்டாயமாக தமக்குரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலில் மலேரியா நோய்க் கிருமி தொற்றக் கூடிய ஏதுநிலை காணப்படலாம். ஒரு நோயாளி உள்ளதன் காரணமாக,

எனவே மாநகர சபையினர் யாழ் போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு நுளம்பு பெருகும் குப்பை கூழங்களை உடனடியாக அகற்ற வேண்டும்” என்றார்.

பகிரவும்...