Main Menu

இளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி

உலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் அதேவேளை, எதிர்காலத்திலும் தமது திறமையினாலும் திறன்களாலும் உலகை வெற்றிகொள்வதற்கு இளைஞர், யுவதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இதற்கான அனைத்து வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று (17) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச உலக இளைஞர் திறன் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையர்களின் விசேட திறமைகளை மேம்படுத்தி தேசத்தின் எதிர்காலத்திற்காக போட்டித்தன்மைமிக்க உலகை வெற்றிகொள்வதற்கு விரிவான சமூக உரையாடலுடன் அனைவரது அர்ப்பணிப்பும் அத்தியாவசியமாகுமெனத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரேரணைக்கமைய ஐக்கிய நாடுகள் சபையினால் பெயரிடப்பட்ட உலக இளைஞர் திறன் தினம் அவ்வமைப்பில் அங்கம்வகிக்கும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளிலும் ஜூலை மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. 

“திறன்களின் ஊடாக வெற்றிகரமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் இவ்வருட இளைஞர் திறன் தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டதுடன், அதனுடன் இணைந்ததாக இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்திக்கான விசேட செயற்திட்டங்கள் பலவும் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

பதிற் கடமை அமைச்சர் புத்திக்க பத்திரன, இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரனவித்தான ஆகியோரும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

பகிரவும்...