Main Menu

இன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை

லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதலாம் சுற்றில் கடைநிலை அடைந்த அணிகளுக்கு இடையிலான இரண்டாம் சுற்றின் கடைசி முன்னோடிப் போட்டியில் பிஜி அணியிடம் 44 க்கு 59 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி மற்றொரு தோல்வியைத் தழுவியது.

போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தின் ஆரம்பத்தில் 6 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த இலங்கை அணியினர் அதன் பின்னர் தவறுகளை இழைத்தவண்ணம் இருக்க பிஜி அணியினர் கோல் நிலையில் இருந்த வித்தியாசத்தை குறுக்கினர். எனினும் முதலாம் கட்ட நிறைவில் 11 க்கு 10 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் பிஜி அணியினரின் வேகத்துக்கும் விவேகத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய இலங்கையினால் 7 கோல்களை மாத்திரமே பெறமுடிந்தது. இப் பகுதியில் பிஜி அணி 7 கோல்கள் போட்ட பின்னரே முதலாவது கோலை இலங்கை போட்டது. மறுபுறத்தில் பிஜி 10 கோல்களைப் பெற்றது.

இடைவேளையின்போது பிஜி 27 க்கு 20 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை, எதிரணிக்கு குறைந்தது 5 சந்தர்ப்பங்களில் கோல்களைத் தவறவிட்டதால் எதிரணிக்கு இரட்டை வாய்ப்புகள் தாரைவார்க்கப்பட்டது. இது இலங்கைக்கு மேலும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்தது. 

இப் பகுதியில் பிஜி போட்ட 20 கோல்களுக்கு பதிலாக இலங்கையினால் 8 கோல்களையே போட முடிந்தது. இதற்கு அமைய மூன்றாவது கால் மணிநேர ஆட்ட நிறைவில் பிஜி 47 க்கு 28 என முன்னிலை வகித்தது.

கடைசி கால் மணி ஆட்டப் பகுதியில் காலந்தாழ்த்திய திறமையை வெளிப்படுத்திய இலங்கை, அப் பகுதியை கடும் சவாலுக்கு மத்தியில் 16 க்கு 12 என தனதாக்கியது. எனினும் ஒட்டுமொத்த நிலையில் 59 க்கு 44 என்ற கோல்கள் அடிப்படையில் பிஜி வெற்றிபெற்றது.

இப் போட்டியில் தர்ஜினி சிவலிங்கம் 39 முயற்சிகளில் 36 கோல்களையும் துலங்கி வன்னிதிலக்க 5 முயற்சிகளில் 2 கோல்களையும் போட்டனர்.

பகிரவும்...