Main Menu

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா!

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இந்திய மாக்கடலின் கேந்திர முக்கியத்துவம் மிக்க கடற்பாதைகளை உலகின் அரைவாசிக்கும் மேற்பட்ட கொள்கலன் தாங்கி கப்பல்கள், மூன்றில் ஒரு பங்கு சரக்குக் கப்பல்கள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய்க் கப்பல்கள் போன்றன பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் தென்சீனக் கடலுக்கு மலாக்கா நீரிணையின் ஊடாகச் செல்கின்ற கப்பல்கள் இலங்கைத் தீவிற்கு அருகிலுள்ள கடற்பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

‘கேந்திர முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்யும் போது இடம் அமைவிடத்தைக் கருத்திற் கொள்ள வேண்டும்’ என கடந்த நவம்பர் மாதம் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் பிரதம கட்டளை அதிகாரியான அட்மிரல் ஹரி ஹரிஸ் தெரிவித்திருந்தார். ‘ஆனால் இந்த அமைவிடமானது நிலைத்தன்மை அற்றதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலற்ற இடத்திலும் அமைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என கட்டளைத் தளபதி ஹரிஸ் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் சிறிலங்காவின் ஸ்திரத்தன்மையானது அதிகரித்துள்ளது. சீன மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் சிறிலங்காவில் கால்பதிப்பதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். எனினும் இவ்விரு நாடுகளின் அணுகுமுறைகளும் நோக்கங்களும் கணிசமானளவு வேறுபட்டுள்ளன.

சீனாவைப் பொறுத்தளவில், சிறிலங்காவானது ஆசியா தொடக்கம் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா வரையிலான கடல் வழி வர்த்தகச் செயற்பாடுகளுக்கும் சீனாவின் உள்நாட்டு பெற்றோலிய வளத்தைக் கொண்டு செல்வதற்குமான கேந்திர முக்கியத்துவ அமைவிடத்திலுள்ளது.

சிறிலங்காவில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை சீனா விரிவுபடுத்தியுள்ளது. சீனாவின் இத்தகைய செயற்பாடானது தமது நாட்டை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இலங்கையர்கள் நோக்குவதுடன் இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

சீனா தனது ஒரு பாதை ஒரு அணை என்ற திட்டத்தை அமுல்படுத்துவதை நோக்காகக் கொண்டே சிறிலங்காவில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. சீனா தனது திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சிறிலங்கா போன்ற நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் முதலீடுகளைச் செய்து வருவதாக ஆய்வாளர் சியானா குணசேகர கடந்த பெப்ரவரி மாதம் எழுதிய பத்தி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

 

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்திற்கு சீனா பல பில்லியன் டொலர்களை அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடனாக வழங்கியது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதற்கருகிலுள்ள விமான நிலையம் போன்றவற்றை அமைப்பதற்காக பல பில்லியன் டொலர்களை சீனா வழங்கியது.

சீனா தனது நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களைக் கொண்டே இத்திட்டங்களை மேற்கொண்டதாகவும் இதனால் உள்நாட்டில் உள்ளவர்கள் தொழில்வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பற்றிருந்ததாகவும் ஆய்வாளர் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை  சிறிலங்காவினால் அடைக்க முடியாத நிலை காணப்படுகிறது. சீனாவிடமிருந்து 8 பில்லியன் டொலர் நிதி கடனாகப் பெறப்பட்டது. இதனால் இந்தக் கடனை அடைப்பதற்காக தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத உரிமை 1.1பில்லியன் டொலர் பெறுமதிக்கு சீனாவிடம் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சீனா, அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது.

இத்திட்டத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இத்திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் நான்கு தடவைகள் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் தரித்து நின்றுள்ளன. சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் புலனாய்வு சார் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற நோக்கங்களுக்காக அமெரிக்கக் கடற்படையினர் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த மாதம் USNS Fall River  என்கின்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. 2017ம் ஆண்டிற்கான வருடாந்த பசுபிக் கூட்டு நடவடிக்கையின் முதல் தரிப்பிடமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு இக்கப்பல் வருகை தந்தது. மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரத் திட்டங்களை நோக்காகக் கொண்டே இக்கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இக்கப்பலில் பயணித்த மாலுமிகள், கடற்படை வீரர்கள் மற்றும் சுழியோடிகள் போன்றோர் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுடன் கரப்பந்து விளையாடினார்கள். அத்துடன் இவர்கள் சிகிச்சை நிலையங்களில் மலசலகூடங்களை அமைந்ததுடன் அவுஸ்திரேலிய போன்ற நாடுகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சையையும் வழங்கினர்.

அமெரிக்க கடற்படையினர் சிறிலங்காவின் வீதிகளில்  பயணித்த போது ‘ஆபத்தான மயில்கள் முன்னால்’ போன்ற பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தனர். அமெரிக்கர்கள் பயணித்த போது இலங்கையர்கள் அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புரூணை, இந்தோனேசியா, யப்பான் போன்ற அனைத்து நாடுகளுக்கும் சொந்தமான தரை மற்றும் கடல் பிரதேசங்களை சீனா தனக்கு மட்டுமே சொந்தமானது எனக் கூறுகிறது. இந்த நாடுகள் சீனாவுடன் சிக்கலான வர்த்தக சார் உறவைப் பேணும் அதேவேளையில் அமெரிக்க இராணுவம் மற்றும் இராஜதந்திர குழுக்களுடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றன.

சிறிலங்கா, சீனாவிடம் அடிபணியக்கூடாது என்பதையே இந்தியாவும் ஏனைய நாடுகளும் விரும்புகின்றன. அனைத்துலகச் சட்டத்தின் கீழ் அமெரிக்க கடற்படையினர் சிறிலங்கா போன்ற நாடுகளுடன் தொடர்பைப் பேணுவதற்கு சீனா தடையாக உள்ளது. இதன் காரணமாகவே சீனாவுடன் உறவைப் பேணக் கூடாது என இந்த நாடுகள் கூறிவருகின்றன.

சீனாவானது சிறிலங்காவிற்கு அருகிலுள்ள அனைத்துலக கடற்பரப்பில் சட்டரீதியான வர்த்தக மற்றும் இராணுவப் போக்குவரத்தில் ஈடுபடுகிறதா அல்லது போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறதா என்பதை அமெரிக்கக் கடற்படை அறிய விரும்புவதாக கடந்த நவம்பரில் ஹரிஸ் தெரிவித்திருந்தார்.

இந்திய மாக்கடலில் இடம்பெறும் புலனாய்வு சார் தகவல்களை ஏற்கனவே இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து வருவதாகவும், சிறிலங்காவுடனான உறவானது இன்னமும் விரிவடையாவிட்டாலும் கூட எதிர்காலத்தில் இந்த உறவு நெருக்கமடைவதே தமது நீண்ட கால நோக்காகும் எனவும் அமெரிக்க கடற்படைத் தளபதி ஹரிஸ் கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார்.

‘தகவல் பரிமாற்றமே மிகவும் முக்கிய நோக்காகும். இது ஒரு குறிக்கோளாக உள்ளதால் இதனை அடைவதற்கு கடும் பணியாற்ற வேண்டும் என்பதற்கு நிதியும் தேவைப்படுவதாக நான் உணர்கிறேன்’ என அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி ஹரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

வழிமூலம்       – Stars and Stripes
மொழியாக்கம் – நித்தியபாரதி

பகிரவும்...