Main Menu

இன்று உலக தாய் மொழி தினம்

எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன் முதலியன சிலவாகும்.

சமஸ்கிருதமும், இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றது. தமிழ் மொழி தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது.
தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ் மொழியை பேசிய இனத்தோர் தமிழர் எனப்பட்டனர். தமிழ் மொழி வழங்கிய தேசம் தமிழகம், தமிழ் நாடு, திராவிடம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டை பண்டைய நாளில் சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பாடுபட்டனர். தமிழ் மொழியை கற்று உணர்ந்த புலவர்களை பொன்னும் பொருளும் தந்து வாழ்த்தினர்.

தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்த தமிழ் இன்று மலேசியா, சிங்கபூர், இலங்கை, தென்னாபிரிக்கா,.. போன்ற பல நாடுகளில் வழங்கி வருகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் விரிவடைந்து விட்டது.
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது. இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழ் இசையுடன் இணைந்தது. நாடக தமிழ் கதை, கூத்து என்பன கலந்து வருவது.

பண்டைத்தமிழ் மன்னர்கள் மூன்று சங்கங்களை அமைப்பித்தனர். அவை, முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். இதன் மூலம் பல தமிழ் நூல்களை இயற்றினார்கள். இலங்கை நாட்டவரான ஈழத்துப்பூதன் தேவனார் கடைச்சங்க புலவருள் ஒருவர் ஆவர். அவர் நக்கீரர், கபிலர், பரணர் போன்று அறிய பாடல்களை எழுதிஉள்ளார்.

தமிழ் நூல் பரப்பு மிகவும் பறந்து பட்டது. “திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம்” என்பன அவற்றுள் சிலவாகும். பாரதியார்

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எங்காயினும் கண்டதில்லை”

என அறுதியிட்டு கூறியுள்ளார்.

மிக பிற்காலத்திலே நாவலர் பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர் தோன்றி தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாட்டினர்.

“நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?”

என்று சொல்லும் அளவிற்கு நாவலரின் தொண்டு அமைந்திருந்தது.
பாரதியார் புதுமை புரட்சிக்கு வழிவகுத்தார்.

இன்று பல்கலைகழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும் தமிழ் மொழியை பேணுவதில் ஈடுபட்டு வருகின்றன.

எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியை சான்றோர் தமிழ் தாய் என்றும் தமிழ் தெய்வம் என்றும் போற்றுவர். எங்கள் தமிழ் தாய் தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றாள் என்று கூறினால் அது மிகையாகாது.

1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்க தேச மொழியுரிமைப் போராளிகளின் நினைவாகவும், அழிந்து வரும் மொழியை காப்பாற்றவும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி தாய் மொழி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது.

மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனது இல்லை. அதுவே நம் வாழ்க்கை. ஒரு இனத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்வது மொழி. மொழியின்றி மனித குலத்துக்கு சிந்தனை கிடையாது. சிந்தனை இல்லாமல் மனிதன் இல்லை.

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 7000 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இன்னும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் வார்த்தை வடிவம் பெறாமல், வெறும் பேச்சுமொழியாக மட்டுமே உள்ளன. வளமான மொழிகளிலேயே கூட ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் கல்வி மொழியாக, ஊடக மொழியாக, கணினி மொழியாக ஆக்கப்படவில்லை. இப்போது பேச்சு வழக்கில் வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்று கவலைப்படுகிறார்கள் மொழியியல் நிபுணர்கள்.

உலகில் எந்த ஒரு மொழியும் சாதாரணமாக உருவாவது இல்லை. ஒவ்வொரு மொழியும் பல நூற்றாண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் கலந்து அவர்களின் அனுபவங்களால் வார்த்தைகளைப் பெற்று, இலக்கணங்களால் நேர்த்தி கொண்டு, பாடல்களால் ஆராதிக்கப்பட்டு, இலக்கியங்களால் செழுமை சேர்க்கப்பட்டு, அந்த இனத்தின் பிரித்துப் பார்க்க முடியாத அங்கமாகிறது. அவற்றை நாம் கற்றுக் கொள்ளவும். அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தரவும் மொழியே கருவியாக இருக்கிறது.

தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை. இவற்றிற்கு சான்று :

தன் தாய் மொழியில் கல்வி கற்று இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல் பத்து இடத்தைப் பிடித்துள்ள நாடுகள் இதோ,

1. அமெரிக்கா-இங்கிலிஷ்

2. ஜப்பான்- ஜாப்பனிஷ்

3. ஜெர்மனி-ஜெர்மன்

4. சைனா-மான்டரின்

5. கத்தார்-அரபி,

6. நார்வே –நார்வேஜியேன்

7. தென் கொரியா-கொரியன்

8. லெக்சம்பெர்க்- லெக்சம்பெர்ஷ்

9. ஐக்கிய அரபு எமிரேட் – அரபிக்

10. குவய்த் – அரபிக்..

தன் தாய் மொழியை விட்டு பிற மொழி கற்ற நாடுகள், முதல் பத்து ஏழை நாடுகளில் உள்ளது..

1. காங்கோ

2. லிபிரியா

3. ஜிம்பாப்வே

4. புரண்டி

5. எரித்திரியா

6. மத்திய ஆப்பிரிக்க குடியரசு,

7. நய்ஜிரியா

8. மால்வி,

9.டொகொ

10. மடகாஸ்கர்.

கண்டுபிடிப்பாளிகள் பெரும்பாலோனோர் தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள் தான் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தாய் மொழியை முதன்மையாக கொண்ட
இங்கிலாந்து -126 கண்டுபிடிப்பும்,

அமெரிக்கா-447,

சைனா-201,

ஜெர்மினி-201,

ரஷியா-276 கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்துள்ளது உள்ளது,

இந்தியா-57, குறைவாகவே கண்டுபிடித்துள்ளது, அதுவும் அதில் அதிகம் நம் நாட்டிற்குள் ஆங்கிலம் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்…

காலத்துக்கேற்ப ஒரு மொழி தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்தால் தான் அதன் ஆயுள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி தன்னை புதுப்பித்துக் கொள்ளாத பல மொழிகள் இருந்த தடமே தெரியாமல் மறைந்து விட்டன. உலகத்தில் வழக்கில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் வரும் ஆறே மொழிகள்தான் உலகிற்கு நாகரிகம் சொல்லிக் கொடுத்தவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வரலாறு உள்ளவை என்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த ஆறு மொழிகளில் தமிழுக்கு தனி இடம் உண்டு. சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம் ஆகியவை மற்ற ஐந்து மொழிகள். இதில் தமிழும், சீனமும் மட்டுமே நவீன அறிவியல் யுகத்துக்கு ஈடு கொடுத்து வளர்ந்த மொழிகள். கிரேக்கம் லத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மூன்று செம்மொழிகள் வழக்கத்தில் இல்லை. ஹீப்ரூ மொழியை மீண்டும் வழக்கத்துக்கு கொண்டு வர யூதர்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். இவற்றில் தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளையும் நுண்ணிய ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கிறார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே வளமான இலக்கியமும், வாழ்வியலும் கொண்ட தமிழ் மொழியைப் பேசுவதும், தமிழராக வாழ்வதும் நாம் செய்த பெரும் பேறு. தமிழர்களின் நவீன சிந்தனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் இளமையோடும், புதுமையோடும் விளங்குகிறது நம் தாய்மொழி தமிழ்.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை நேசிக்க வேண்டும் என்று சொன்னார் மகாத்மா காந்தி, ஆங்கிலத்தில் எழுதுவதை விட, பேசுவதை விட என் தாய்மொழி குஜராத்தியில் எழுதினால், பேசினால் எளிமையாக என் கருத்துகளை வெளிப்படுத்த முடியும் என்றார் அவர்.

பாரதி காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார் .” உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே ? “என கேள்வி எழுப்ப,”இனிமேல் அவ்வாறே செய்கிறேன் நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் ?” என காந்தி கேட்க பிறர் மனம் நோக எழுதும் பொழுது அன்னை மொழியை உபயோகப்படுத்த கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார் பாரதி .தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப்பாடம் நடத்தினார் பாரதி.

காந்தி, வாழ்க்கை வரலாற்று நூலான சத்தியசோதனையை தன் தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார். தாகூர், கீதாஞ்சலி எனும் நோபல்பரிசு பெற்ற படைப்பை முதலில் உருவாக்கியது அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான். பத்திற்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்தாலும் பாரதி உலக புகழ் மிக்க கவிதைகளையும் கட்டுரைகளையும் தந்தது அவரது தாய்மொழியான தமிழில்தான்.

“தாய் மொழி கண் போன்றது, பிறமொழி கண்ணாடி போன்றது” என்கிறது மூதுரை. கண்ணாடிகளுக்காக, கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து. வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

உலக நாடுகள் பலவற்றில் இன்று தமிழர்கள் குடியேறி, வாழ்ந்தும், பல சாதனைகளை புரிந்தும் வருகின்றனர். நாம் நாட்டின் உடன் பிறப்புகளோடு உறவாட இந்தி கற்றாலும், உலக சந்தையில் நம் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆங்கிலம் கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க தாய்மொழியான தமிழில் கல்வி கற்று… தமிழர்களோடு தமிழில் உரையாடுவோம்.. என்பதை இன்றைய உறுதிமொழியாக ஏற்போமாக….

பகிரவும்...