Main Menu

இந்தோனேசியாவில் பலத்த மழை – நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு !

இந்தோனேசியாவில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவின் தென்கிழக்கில் உள்ள மேற்கு ஜாவாவின் சிஹான்ஜுவாங் கிராமத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை மீண்டும் மற்றுமொரு நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 11 ஆக காணப்படுவதாகவும் மேலும் பகல் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான மழைக்காலங்களில், காடுகளை வெட்டுவதன் மூலம் பெரும்பாலும் நிலைமை மோசமடைகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...