Main Menu

இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளுடன் இணக்கமாகப் பங்கிட்டுக் கொண்டு களம் காண ஆயத்தமாகிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்வில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, கழகத்தின் சார்பில் களமிறங்கும் 21 வெற்றி வேட்பாளர்களையும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அறிவித்தேன்.

எந்தவொரு தேர்தல் களமாக இருந்தாலும் எதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு களம் காண்கிறோம் என்பதைத் தேர்தல் அறிக்கை வாயிலாகத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து மக்களைச் சந்திப்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தி.மு.கழகம் கடைப்பிடித்து வருகின்ற தேர்தல் நடைமுறை. அதன் வெளிப்பாடுதான், கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 64 பக்கத் தேர்தல் அறிக்கை.

தமிழ்நாடு மீண்டும் உரிமையுடன் திகழ்வதற்காக மட்டுமின்றி, இந்தியாவில் உண்மையான ஜனநாயகமும் கூட்டாட்சிக் கருத்தியலும் நிலைபெறவும் கழகத்தின் சார்பில்
வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை – நடுத்தர மக்களை அன்றாடம் பாடுபடுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, 500 ரூபாயாகக் குறைப்பது, பெட்ரோல் – டீசல் விலைக் குறைப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம்.

பகிரவும்...