Main Menu

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள அரசாங்க கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நங்கர்ஹார் மாகாணத்தில் கானி கெல் மாவட்டத்தில் சில இராணுவ வசதிகளையும் வைத்திருந்த ஒரு நிர்வாக கட்டிடத்தின் நுழைவாயிலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 15பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் நான்கு பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் உட்பட நாற்பத்திரண்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத குழுக்களும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனபது சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த காலங்களில் ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் தலிபான் போன்ற ஆயுதக் குழுக்கள் ஆப்கானிய அரசாங்கம், தேசிய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் பல தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தலிபான்கள் கட்டாரி தலைநகர் டோஹாவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...