Main Menu

ஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனவே, இனவெறி பிடித்துள்ள சில ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற எதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்க ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.

ஆபிரிக்க மண்ணும் மக்களும் ஒருபோதும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக இருப்பதை அனுமதிக்க முடியாது.

ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளை, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூறியுள்ளதோ அதை உலகச் சமூகம் கடைபிடிக்க வேண்டும். அது ஆபிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான்.

முதலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற தங்கள் ஏதேச்சதிகார மனப்பாங்கை நிறுத்த வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசிகளை பரிசோதிக்கும் ஆலோசனைகள் என்பது இனவெறி பிடித்த வார்த்தைகள். இதைக் கடுமையாக எதிர்ப்பதோடு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதுபோன்ற, தடுப்பூசிகளை ஆபிரிக்க மண்ணில் மட்டுமல்லாது எந்த நாட்டிலும் பரிசோதிக்கவும் அனுமதிக்கமாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...