Main Menu

ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்

ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு,  மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.  அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.   அதனுடன் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளிலிருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் 2014-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததது.  இதனால் கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது கணவரின் தாயார் கொடுமைப்படுத்தியதாக அந்த பெண், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார்.  இந்த நிலையில் அந்த பெண்ணின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன்,  ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று தெரிவித்தார்.

மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பகிரவும்...