Main Menu

ஆங்சான் சூகிக்கு எதிராக மேலும் சில குற்றச் சாட்டுக்கள்!

மியன்மார் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூகியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர்.

காணொளி அழைப்பு மூலம் நீதிமன்றத்தில் சூகி நல்ல உடல்நிலையுடன் உள்ளதாகவும், தனது வழக்கறிஞர்கள் குழுவை காண வேண்டும் என்று கூறியதாகவும் அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது தடைகளை கொவிட்- 19 கட்டுப்பாடுகளை மீறியதாகவும், அச்சத்தை உண்டாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முதலில் ஆங் சான் சூகி மீது வாக்கி டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகவும், மியன்மாரின் இயற்கை பேரழிவு சட்டத்தை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தன. ஆனால் நேற்று (திங்கட்கிழமை) அவர்மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முதல் கட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. புதிய குற்றச்சாட்டுகளுக்கு என்ன மாதிரியான தண்டனை என்பது தெரியவில்லை. நேற்று நடைபெற்ற வழக்கின் விசாரணை மார்ச் 15ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த 1ஆம் திகதி கவிழ்த்தது.

இதன்போது அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் ஓராண்டுக்கு இராணுவ ஆட்சி தொடரும் எனவும் அதன்பின்னர் தேர்தல் நடைபெறும் எனவும் இராணுவம் அறிவித்தது.

ஆனால், இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது ஒருபுறமிருந்த மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இராணுவம் விதித்துள்ள தடையை மீறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். நடைபெற்று வரும் போராட்டத்தில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை 18பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...