ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை
ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமையன்று (28) 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியதுடன் புயல்கள் பிற பகுதிகளுக்கு நகர்ந்தன.
அதேவேளையில், சாதனை அளவிலான இந்த வெப்ப அலை காரணமாக பிரான்சில் 1,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகின.
வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முதியவர்களையே பாதித்துள்ளதாகத் தெரிவித்த பிரான்ஸ் பொது சுகாதார முகமை, முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தனியார் வீடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் தெரியவரும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.
ஜூன் 20 ஆம் திகதி தொடங்கிய வெப்ப அலை ஐரோப்பாவில் பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமானதாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீவிர வெப்ப நிலை மின் உற்பத்தியைப் பாதித்துள்ளதுடன், உள்கட்டமைப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தி, சுகாதார அமைப்புகளின் மீதும் கடும் சுமையைச் சுமத்தியுள்ளது.
தற்போதைய வெப்ப நிலை தொடர்பில் எக்ஸில் பதிவிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைப் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,
தற்போது 150 மில்லியன் மக்கள் கடும் வெப்பத்தின் பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, மின் கட்டமைப்புகள் திணறி வருகின்றன.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக, ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய வகையிலான தீவிர வெப்ப அலைகள் இப்போது கிட்டத்தட்ட ஆண்டுதோறும் நிகழ்கின்றன.
ஐரோப்பாவில் உள்ள வீடுகள், பணியிடங்கள் மற்றும் பாடசாலைகள் இத்தகைய கடும் வெப்பத்தைச் சமாளிக்கத் தயாராக இல்லை – என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் இல்லாவிட்டால், இந்த வெப்ப அலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

போக்குவரத்து, மின்சார அமைப்புகள் பாதிப்பு
ஆஸ்திரியா, செக் குடியரசு, ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வெப்பநிலை சாதனை அளவைத் தாண்டியது.
அதேவேளையில், பிரான்ஸின் சில பகுதிகளில் ஏற்பட்ட புயல்கள் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகத்தில் மேலும் இடையூறுகளை ஏற்படுத்தின.
ஜெர்மனியின் மேற்கு மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஒரு முக்கிய ரயில் பாதையில் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டன; கிழக்குப் பகுதியிலுள்ள லீப்ஜிக் நகரில் டிராம் சேவைகள் (மின்வண்டி) நிறுத்தப்பட்டன.
சூரியன் மறையும் வரை வெளியே செல்லத் தயங்கிய பலர் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக முடங்கியிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ரோமில், கடும் வெப்பம் நிலவிய போதிலும் புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு போப் லியோ நன்றி தெரிவித்தார்.
தீவிர வெப்பம் ஐரோப்பாவின் ஆறுகளையும் பாதித்துள்ளது; இதனால் ஆற்று நீர்மட்டம் குறைந்து நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், மின் உற்பத்தி மற்றும் விவசாயத்திற்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற பலர் நீர் நிலைகளில் இருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
