Main Menu

உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்: ஜூன் மாதம் அதிக வெப்பநிலை பதிவு

உலகின் கடல்கள் இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிக வெப்பமான ஜூன் மாதத்தை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus Marine Service வெளியிட்ட தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21.0 டிகிரி செல்சியஸ் (69.8 டிகிரி பாரன்ஹீட்) என பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலை, இதற்கு முன்னர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளையும் முறியடித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதாகவும், பரவலான கடல் வெப்ப அலைகள் ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் வெப்ப அலைகள் தொடர்ந்து விரிவடைந்து, உலகின் மொத்த கடல் பரப்பளவில் சுமார் 82 சதவீதமான பகுதிகளை பாதித்துள்ளதாக Simon van Gennip தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியதரைக் கடல், மத்திய வட அட்லாண்டிக் கடல் மற்றும் பூமத்திய ரேகைப் பசிபிக் கடல் பகுதிகள் அதிக வெப்ப அழுத்தத்தை எதிர்கொண்ட முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

El Niño தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் புதிய வெப்ப சாதனைகள் பதிவாகக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடல் வெப்பநிலை அதிகரிப்பது கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள், மீன்பிடி வளங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை சமநிலைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.