Main Menu

அ.தி.மு.க. அரசு சொன்னதால் சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றினோம்- அப்பல்லோ மருத்துவமனை தகவல்

ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பலரிடமும் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவில் முகாந்திரம் இல்லை என்று கூறி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அப்பல்லோ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனைதான் தடையாக உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு:-

ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை இந்த ஆணையம் மேற்கொள்ளவில்லை.

நிறைய அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்படாமல் இருக்கும்போது மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த வி‌ஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமை உண்டு.

எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம். இனி நாங்கள் ஆணையத்தின் முன்பு ஆஜராக மாட்டோம்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வர்ணனையாளரை போல ஆணையம் தகவல்களை தன் இஷ்டத்துக்கு கசியவிட்டது.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

பகிரவும்...