Main Menu

அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை – உறவினர்கள்

அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் வந்து தங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத் தேடும் சங்கத்தின் முன்னாள் தலைவி மனுவல் உதையச்சந்திரா, மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இடம்பெற்று வந்தது. குறித்த வழக்கு விசாரணைகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக நாங்களும் சென்று வந்தோம்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் சதொச மனித புதைகுழி வழக்கு விசாரணைகளில் முன்னிலையாக முடியாது என கட்டளையிடப்பட்டுள்ளது.

தற்போது அரச சட்டத்தரணி அல்லது காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் மாத்திரமே குறித்த வழக்கு விசாரணைகளில் ஆஜராக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அரசாங்கத்தையே நம்பவில்லை.

அரசாங்கத்தை நம்பாத நிலையில் நாங்கள் எங்களுக்கு என சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்து பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்காக அவர்கள் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கியதே அரசாங்கம். அப்படி அரசாங்கம் செய்துள்ள நிலையில் அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றால் நாங்கள் யாரிடம் சென்று நீதி கேட்பது? எதிர்வரும் தினங்களில் தடையப் பொருட்கள் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

குறித்த நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறவுள்ளது? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக முடியாது என்றால் தடையப் பொருள் பரிசோதனைகளை நாங்கள் எவ்வாறு நம்புவது? எங்களுக்கு அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை, அரச சட்டத்தரணிகளிலும் நம்பிக்கை இல்லை. சர்வதேசம் தான் எங்களுக்குப் பதில்சொல்ல வேண்டும்.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை 335பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என அரச தரப்பு அரசியல்வாதிகள் தெரிவித்தனர். புதைத்த இடத்தைக் காட்டினால்தானே மண்ணைத் தோண்டிப் பார்க்கமுடியும்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், உறவுகள் எங்கேயோ இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக்கொண்டு இருக்க காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இல்லை என்று இவர்கள் செல்ல நாங்கள் யாரிடம் சென்று நீதி கேட்பது என்று தெரியாமல் உள்ளது. எனவே எங்களுக்கு சர்வதேசம் தான் நீதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

பகிரவும்...