Main Menu

அரசியல் கட்சி துவக்கம்: ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை – ரஜினி

அரசியல் கட்சி துவங்குவது குறித்து மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017ம் ஆண்டில் புதிய கட்சி தொடங்கி, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் கட்சி தொடங்கும் பணிகளில் அவர் மும்முரம் காட்டி வருவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின், கூட்டத்தில் கட்சி தொடங்குவது, கட்சியின் கொள்கைகள், மாவட்டங்களில் பலம் என்ன, என்பன உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் தம்மிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு தான் அளித்த பதில் திருப்தியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறினார். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் இருந்ததாகவும், அது என்ன என்று பிறகு தெரிவிப்பதாக ரஜினி தெரிவித்தார்.

இஸ்லாமிய மதகுருமார்களுடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது என்றும் சிஏஏ குறித்த கவலைகளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தெரியப்படுத்துமாறு தான் அவர்களிடம் தெரிவித்ததாகவும் ரஜினி விளக்கம் அளித்தார்.

பகிரவும்...