Main Menu

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்

வங்கக் கடலில் உருவான அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

வங்கக்கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த அம்பன் புயல் நேற்று வடக்கு – வடகிழக்கை நோக்கி நகர்ந்தது.

பின்னர் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஸ் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது.

பிற்பகல் 2.30 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது.

இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டடங்கள் சேதமாகின. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 10 முதல் 12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புயல் காரணமாக, மேற்கு வங்கத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோரும், ஒடிசாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...