Main Menu

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியுள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200- ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதுடன், பல நாடுகளும் முடக்கத்தை தளர்த்தி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி சமைத்துள்ளன.

ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸில் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய்த்தொற்றால் மரணித்துள்ளனர். பிரித்தானியாவில் 363 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் நேற்றும் ஆயிரத்து 461 மரணங்கள் சம்பவித்துள்ளன. அங்கு மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளன.

அண்மைய நாட்களில் அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்து வரும் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நேற்று மட்டும் 911 பேர் மரணித்துள்ளதுடன், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனால், உலகளவில் அதிக தொற்றாளர்கள் கொண்ட நாடுகளின் வரிசையில் 3 ஆவது இடத்திற்கு பிரேசில் முன் நகர்ந்துள்ளது.

நேற்று வரையான காலப்பகுதியில் உலகளவில் 50 லட்சத்து 85 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 லட்சத்து 29 ஆயிரத்து 721 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 லட்சத்து 21 ஆயிரத்து 672 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...