Main Menu

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் பிங் லியூ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, டவுன்ஹவுஸில் உள்ள தனது வீட்டில் பிங் லியூ, தலை, கழுத்து, உடல் மற்றும் முனைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத இரண்டாவது நபர், தனது காரில் இறந்து கிடந்துள்ளார். அவர் 46 வயதான ஹாவோ என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பிங் லியூவை கொலை செய்த பின்னர், இவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்திருப்பதாக பொலிஸார் நம்புகிறார்கள்.

இவரது மரணம் தொடர்பாக பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரும் போற்றப்பட்ட சக ஊழியருமான பிங் லியூவின் துயர மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பல்கலைக்கழகம் லியூவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியூ கணக்கீட்டு மற்றும் கணினி உயிரியல் துறையில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர். ஆராய்ச்சி துறையில் பலரின் மரியாதையையும் பாராட்டையும் பெற்றவர், மேலும் அறிவியலுக்கு தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இளைஞர்களால் நன்கு மதிக்கப்படும் வழிகாட்டியாகவும் புகழ் பெற்றவர்.

SARS-CoV-2 நோய்த்தொற்று மற்றும் பின்வரும் சிக்கல்களின் உயிர்மங்களால் ஆன இயந்திரநுட்பம் (cellular mechanisms) வழிமுறைகளைப் புரிந்துகொள்வதில் பிங் லியூ குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார் என பல்கலைக்கழக கணக்கீட்டு மற்றும் கணினி உயிரியல் துறையின் அவரது சகாக்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மருத்துவப் பாடசாலை உறுப்பினர்கள் தங்கள் முன்னாள் சகாவை ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் வழிகாட்டியாக வர்ணிக்கின்றனர்.

பகிரவும்...