Main Menu

அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்: அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் அறிப்பு

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நேற்று (புதன்கிழமை) மாலை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறுகையில், “மேற்கு ஆசியாவில் அமெரிக்கா திட்டமிட்டிருந்த பல சதித் திட்டங்களை முறியடிக்கும் வல்லமை படைத்தவராக காசிம் சோலெய்மனி இருந்தார். அவர் துணிச்சலான இராணுவ வீரர். அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாலஸ்தீன மக்களுக்கு உதவியவர் சோலெய்மனி.

காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதன் மூலம் நம்முடைய புரட்சி மீண்டும் புத்துயிர் பெற்று உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. நம்முடைய எதிர்ப்பு தொடர்ந்து உயிர்ப்புடன்தான் இருந்து வருகிறது. அமெரிக்காவின் முகத்தில் நேற்று இரவு அறை கொடுத்துள்ளோம். இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஊழல் படிந்த செயல்கள் முடிவுக்கு வரவேண்டும்.

நம்முடைய பிராந்தியத்தையே அமெரிக்கா அழித்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. ஆனால், அவர்களின் அனைத்துத் தலையீடுகளும் முடிவுக்கு வர வேண்டும். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதை நாம் எதிர்கொள்வோம். காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இராணுவ நடவடிக்கை போதாது” எனத் தெரிவித்தார்.

ஈரான் இராணுவத்தின் முக்கியத் தளபதியாகவும், ஈரான் புரட்சிப் படையின் தளபதியாகவும் இருந்த காசிம் சோலெய்மனி கடந்த 3ஆம் திகதி ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது. பாக்தாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய சோலெய்மனியை அமெரிக்க இராணுவம் தனது ஆளில்லா விமானத்தின் மூலம் ஏவுகணையை வீசித் தாக்குதல் நடத்திக் கொன்றது. சோலெய்மனியுடன் சேர்ந்து அவரின் மருமகன் முகந்தீஸ் உட்பட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைக்குப் பழி தீர்க்கும் விதத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நேற்று அதிகாலை ஈரான் இராணுவம் ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் ‘அன் அல் ஆசாத்’ மற்றும் ‘ஹாரிர் கேம்ப்’ ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

தரையில் இருந்து வான் மற்றும் தரை இலக்கை துல்லியமாகத் தாக்கும் ஃபட்டா-313 ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவப்படை அதிகாலை அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கெர்மான்ஷா மாநிலத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 22 ஃபட்டா-313 ரக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் அமெரிக்க இராணுவம் தரப்பில் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹெலிகொப்டர்கள், தளபாடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு பிரித்தானியா, ஜெர்மனி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பகிரவும்...