Main Menu

10,000 ஒட்டகங்களைக் கொல்ல அவுஸ்ரேலிய அரசு தீர்மானம்

அவுஸ்ரேலியாவில் வறட்சி காரணமாக, 10,000 ஒட்டகங்களைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அவுஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு அவுஸ்ரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அதிக அளவிலான நீரை குடித்து விடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒட்டகங்களின் கழிவுகளில் இருந்து ஒரு டன் கார்பன்-டை- ஒக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயு உருவாகின்றது. இது உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் 5,000 முதல் 10,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி சுட்டுக்கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குள் இந்த ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. (புதன்கிழமை) முதல் ஒட்டகங்களைக் கொல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.

உலகின் 7 கண்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் 18 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன. அதேபோல் அந்நாட்டின் 35 சதவீத பகுதிகள் குறைந்த அளவிலேயே மழை பெறுகின்றன. உலக வெப்பமயமாதலாலும், அதிகப்படியான வறட்சி காரணமாகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது.

இந்த தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்புவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கோடிக்கணக்கான வனவிலங்குகள், பறவைகள் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஒட்டகங்களைக் கொல்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...