வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் (19/11/2013) ரி.ஆர்.ரியின் புலம்பெயர் நேயர்களின் இரண்டாம் கட்ட நிதி பங்களிப்பு..(படங்கள்)
புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று (19/11/2013) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் புலம்பெயர் நேயர்களின் இரண்டாம் கட்ட நிதி பங்களிப்புடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஒழுங்கமைப்பிலும், மேற்பார்வையிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்தும், கணவர்களை இழந்தும் விசேட தேவையுடையவராக முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முப்பத்தைந்து பேருக்கு தலா 25,000 ரூபா வீதம் நிதியும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் முப்பத்தைந்து பேருக்கு தலா 3,000 ரூபா வீதம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகமும் வழங்கப்பட்டதோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் ஆற்றி வரும் பணிகளுக்கு நன்றி கூர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களும், சிவில் சமுக அமைப்புகளை சேர்ந்தவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமக்கும் புலம்பெயர்ந்த மக்களூடாக உதவிகளை பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கண்ணீர் மல்க தமது விவரங்களையும் பதிவு செய்தனர்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் புலம்பெயர் நேயர்களின் நிதி பங்களிப்புடன் நெடுங்கேணி பிரதேசத்தில் முதல் கட்டமாகவும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்ற சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்கல் நிகழ்வுகளில் யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை பதினெட்டு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ம.தியாகராசா, எஸ்.கனகசுந்தரசுவாமி, மேரிகமலா குணசீலன் ஆகியோரும், சேருவல பிரதேசசபை உறுப்பினர் சிவயோகேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு யுத்தத்தால் உடல் அவையங்களை இழந்தோருக்கான சுயதொழில் ஊக்குவிப்பு நிதியை வழங்கினர்.
பகிரவும்...