வவு. மரையடித்த குளத்தில் ரி.ஆர்.ரி. நேயர்கள் பங்களிப்பில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு!
வவுனியா பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட ஆறுமுகத்தான் புதுக்குளம் மரை அடித்த குளம் பகுதியில் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு நிகழ்வு 01/01/2014 அன்று நடைபெற்றுள்ளது.
வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி முகாமில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்கள் கடந்த 2012ஆம் ஆண்டு மரைஅடித்த குளம் பகுதியில் குடியேற்றப்பட்டனர். குறித்த கிராம மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கிராமத்திற்கு முன்பள்ளி இன்மையால் சிறுவர்கள் தமது ஆரம்பக் கல்வியைத் தொடராமலேயே வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து ரி.ஆர்.ரி வானொலியின் நேயர்கள் வழங்கிய இரண்டு இலட்சத்து பதினைந்தாயிரம் ரூபா செலவில் குறித்த கிராமத்தில் முன்பள்ளி அமைக்கப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது.
கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் முன்பள்ளியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்துவைத்தார்.
நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் இந்திரராஜா, தியாகராஜா மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் திருமதி மணிவண்ணன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயதீபன் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
நிகழ்வில் பங்குகொண்ட மழலைகளின் பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில்,
மூன்று பக்கமும் காட்டினால் சூழப்பட்ட தமது கிராமத்திற்கான பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது. யானையின் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டும் என்ற அச்ச நிலையிலேயே நாள்தோறும் எமது வாழ்க்கையினைக் கழித்துவருகின்றோம். இந்த நிலையில் எமது குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி அமைக்கப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உதவி புரிந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பகிரவும்...