“வரப்புயர” மரநடுகைத்திட்டத்தால் சாளம்பன் கிராம மக்களுக்கு 400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன! (படங்கள் இணைப்பு)
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம்
அமைப்பின் ஊடாக ‘வரப்புயர மரநடுகைத் திட்டம்’ (என்னை வளர்த்தால் உங்களைக்
காப்பேன்) திட்டத்தின் ஏற்பாட்டில் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான்
பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன் கிராமத்தினைச் சேர்ந்த இருநூறு
குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ
நோதராதலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி
சி.சிவமோகன் ஆகியோர் பங்கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கிவைத்தனர்.
இதன் போது அந்தக் கிராம மக்களால் பிரமுகர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
*அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது,*
இறுதிப்போரில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்
பிரிவினைச் சேர்ந்த 575 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்றுவந்திருக்கின்ற
போதிலும் இதுவரையில் அவர்களுக்கு உரியவகையில் வசதிகள்
செய்துகொடுக்கப்படவில்லை. அதேநேரம் வறுமைகாரணமாக இளைஞர்களும் யவதிகளும்
காமன்ஸ்களிலும் அரபு நாடுகளிலும் பணியாற்றச் செல்வதற்கு முயல்வதால் பல்வேறு
சிரமங்களை எமது பிரதேசம் சந்தித்துவருகிறது,
அதேவேளை, புளியடிக்குளம், ஜங்கன் குளம், விளாத்திக்குளம், உடையார் சாளம்பன்
குளம் உட்பட்ட குளங்கள் புனரமைக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. குளங்களை
புனரமைப்பதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளமுடியும்.
அதனுடன் சாளம்பன் கிராமத்தில் நீருக்கு பலத்த நெருக்கடி நிலை காணப்படுவது
தொடர்பிலும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக 90 குடும்பங்கள்
தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்துவருகின்றன. எதிர்வரும் மாதங்கள் மாரிகாலம்
ஆகையால் வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் இடம்பெறும் அபாயம் உள்ளமையால்
முகாம் ஒன்றினை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட தரப்புக்களை வலியுறுத்துமாறும்
மழையை சமாளித்து மக்கள் ஒதுங்கிக்கொள்ள ஒரு இடமும் இல்லை என்றும் மக்களால்
கோரிக்கைவிடுக்கப்பட்டது.
*இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
தனது உரையில்,*
போர் வெற்றியின் பின்னர் வடக்கில் அபிவிருத்தியும் சமாதானமும்
ஏற்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனாலும் ஐந்து ஆண்டுகள்
கடந்த நிலையிலும் அபிவிருத்தியோ முன்னெடுக்கப்படவில்லை. எமது மக்கள்
சந்தித்துவரும் தொடர் அவல நிலைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தினாலேயே
முடியும் என்றும் எனவே மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முடிவு
காண்பதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட
தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் ஆனந்தன் எம்பி தெரிவித்தார்.
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம்
அமைப்பின் ஊடாக ‘வரப்புயர மரநடுகைத் திட்டம்’ (என்னை வளர்த்தால் உங்களைக்
காப்பேன்) திட்டத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 2
தென்னங்கன்றுகள் என்ற அடிப்படையில் இருநூறு குடும்பங்களுக்க மொத்தமாக 400
தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.