வடக்கில் எறிகணைத்துண்டுகளை உடலில் தாங்கியவாறே சிறுவர்கள் பள்ளிக்குப்போகின்றனர். சிறுவர் தின நிகழ்வில் ஆனந்தன் எம்.பி
வடக்கில் சிறீலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களினால் சிறுவர்கள் உடல் உள ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமது தாய் தந்தையரை தாக்குதல்களுக்கு பலிகொடுத்து திக்கற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். புத்தகப்பைகளுக்கு பதிலாக அவர்கள் தமது உடல்களில் எறிகணைத்துண்டுகளையும், குண்டுகளையும் தாங்கியவாறே பாடசாலைக்குப்போகின்றனர் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம், மன்னார் நானாட்டான் கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட நறுவிலிக்குளம் றோமன்கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில், பாடசாலையின் முதல்வர் ஆசைப்பிள்ளை தலைமையில் கடந்த 03.10.2014 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில்,
சிறுவர்களும் முதியவர்களும் எமது மண்ணின் சொத்துகள். இரு தரப்பினரையும் ஒரேநாளில் கௌரவித்து விழா நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. முதியோர்கள் தமது குடும்பத்துக்காகவும், கிராமத்துக்காகவும் உழைத்திருக்கிறார்கள். ஆன்மிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுயநலமின்றி பொதுநலத்துக்காக அவர்கள் உழைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து வாழ்க்கை அநுபவங்களை இளையோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வறுமை, குடும்ப பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக உணவு, பாதுகாப்பு, சுகாதார குறைபாடுகளுடனேயே முதியோர்கள் வாழுகின்றனர். சிலர் அவர்களை முதியோர் இல்லங்களில் பாரப்படுத்திவிட்டுச்செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. அவர்களை கூடவே வைத்து பராமரிக்கும், பாதுகாக்கும், கௌரவமளிக்கும் கூட்டுக்குடும்ப மரபும் மருவி வருவது வேதனை தருகிறது. இருந்தும் இன்று இந்த பாடசாலையில் நடைபெறும் இவ்வாறான அரிதான நிகழ்வுகள் மூலமாகவே அநுபவங்களை பகிர்ந்துகொள்ளுகின்ற சூழல் எமது சமுகத்துக்கு கிடைக்கின்றது.
வடக்கில் சிறீலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களினால் சிறுவர்கள் உடல் உள ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமது தாய் தந்தையரை தாக்குதல்களுக்கு பலிகொடுத்து திக்கற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். புத்தகப்பைகளுக்கு பதிலாக அவர்கள் தமது உடல்களில் எறிகணைத்துண்டுகளையும், குண்டுகளையும் தாங்கியவாறே பாடசாலைக்குப்போகின்றனர். ஆயிரத்து இருநூறுக்கும் மேல்பட்ட மாணவர்கள் இவ்வாறு சீவிக்கின்றனர். சத்திரசிகிச்சைகள் மூலம் அவற்றை அகற்ற பண வசதி இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் தமது நாளாந்த கடமைகள் காரியங்களை ஆற்றி வருகின்றனர். இதன் காரணமாக வலிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு வகுப்பறைகளுக்குள்ளேயே மாணவர்கள் மயங்கி விழும் அவலநிலையும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து இருபத்து ஆறாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும், முதியோர்களுக்கு இருபதாயிரம் ரூபா பெறுமதியான உடைகளும் வழங்கப்பட்டன. பிரான்ஸ் ரிஆர்ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பிரான்ஸ் ரிஆர்ரி வானொலி ஊடாக மார்கண்டு விமலசிங்கம், ரவிசங்கர், ஸ்காந்தா கந்தையா ஆகியோரதும், லண்டன் பார்வை பத்திரிகையின் சமுகப்பணி பிரிவினரதும் நிதியுதவியில் குறித்த உதவிகள் வழங்கப்பட்டன.
நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் அன்புராஜ், உபதவிசாளர் ம.றீகன், மன்னார் நகரசபை உபதவிசாளர் ஜேம்ஸ் ஜேசுதாசன், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ் , மன்னார் பிரதி கல்வி பணிப்பாளர் கிறிஸ்டிராஜா, நானாட்டான் கோட்டக்கல்வி அதிகாரி ஜெகா, நறுவிலிக்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கமலதாஸ், வட்டுபித்தான்மடு விவசாய அமைப்பு தலைவர் முத்து சத்தியராஜ் ஆகியோரும், பாடசாலை சமுகத்தினரும், கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பகிரவும்...