Main Menu

வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா!

சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது.

எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியாவிற்கு எதிராக சிறிலங்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள் மற்றும் இதன் மனித உரிமை மீறல்களே வடகொரியாவுடனான சிறிலங்காவின் உறவு விரிசலடையக் காரணமாகும்.

வடகொரியாவால் தயாரிக்கப்பட்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தை சிறிலங்கா எதிர்த்ததுடன் கடந்த ஜூலை இறுதிப் பகுதியில் இதனைக் கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றையும் சிறிலங்கா வெளியிட்டதானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சினையை சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் முன்வைத்த போது, சிறிலங்கா அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் வடகொரியாவிற்கு எதிராக சிறிலங்கா அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் அது தொடர்பாக தன்னிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் தெரிவித்திருந்தார். வடகொரியா தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடானது சீரற்றுள்ளது என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

அணுவாயுதப் பரிசோதனையில் ஈடுபடுவதை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள போதிலும் வடகொரியா தொடர்ந்தும் அணுவாயுதப் பரிசோதனையில் ஈடுபடுவதானது சிறிலங்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா அணுவாயுதப் பரிசோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்வது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையால் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஐ.நாவின் உறுப்பு நாடாக உள்ள சிறிலங்காவானது மதிப்பளிப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

வடகொரியா  தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இதுவரை ஐந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக 2006லும் தொடர்ந்து 2013 மற்றும் 2016ல் இரண்டு அறிக்கைளும், இறுதியாக இவ்வாண்டு ஜூலையில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

2006, 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகள் தொடர்பான சிறிலங்காவின் எதிர்ப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிப்படுத்தியது. ஆனால் கடந்த ஆண்டு தொடக்கம் சிறிலங்காவின் இந்த நிலைப்பாடானது மேலும் அதிகரித்துள்ளதையே இறுதியாக வெளியிட்ட அறிக்கை சுட்டிநிற்கின்றது.

2016 செப்ரெம்பரிலும் இவ்வாண்டு ஜூலை மாதத்திலும் சிறிலங்காவால் வெளியிடப்பட்ட வடகொரியா மீதான அறிக்கையானது மிகவும் கடுமையான எச்சரிக்கையாக உள்ளது. குறிப்பாக ‘அனைத்துலக சமூகமானது அணுவாயுதப் பரிசோதனைகள் தொடர்பில் ஒன்றிணைந்து தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் இது அனைத்துலக சமூகத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக எழும்’ என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சால் வடகொரியாவிற்கு எதிராக வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்பாக ஐ.நா பொதுச்சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பிலும் சிறிலங்கா நிலையற்ற தீர்மானத்தையே எடுத்துள்ளது. குறிப்பாக 2007ல் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா இதற்கு ஆதரவாகவும், 2008 மற்றும் 2009ல் இடம்பெற்ற வாக்கெடுப்பை சிறிலங்கா புறக்கணித்ததுடன் 2014ல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்தும் சிறிலங்கா வாக்களித்தது.

மீண்டும் 2015/2016ல் வடகொரியாவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து முன்வைத்த தீர்மானத்தை ஆதரித்தும் சிறிலங்கா வாக்களித்தது. 2014ல் வடகொரியா மீதான தீர்மானத்தை சிறிலங்கா எதிர்த்து வாக்களித்திருந்தமைக்கு தனது நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தமையே காரணமாகும்.

2014ல் ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த சிறிலங்காவின் பிரதிநிதி ஏன் வடகொரியா மீதான தீர்மானத்திற்கு சிறிலங்கா எதிர்த்து வாக்களித்தது என்பது தொடர்பாக விளக்கியிருந்தார். அதாவது இவ்வாறான தீர்மானமானது பயனற்றது எனவும் இந்த விவகாரத்தை பாதுகாப்புச் சபையானது அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்வதற்கு உந்துதல் அளிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் ஐ.நா கூட்டத்தொடரில் பங்குகொண்ட சிறிலங்காவின் பிரதிநிதி குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 1970ல் வடகொரியா தனது தூதரகத்தை கொழும்பில் திறக்கும் அளவுக்கு இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலை பலம்பெற்றிருந்தது.    எனினும், 1971ல் ஜே.வி.பி கிளர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள தூதரகத்தை மூடுமாறும் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அவர்களது சொந்த நாட்டிற்குச் செல்லுமாறும் வடகொரியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் கட்டளையிட்டது.

‘சிலோனில் உள்ள வடகொரியாத் தூதரகத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் சொந்த நலனுக்காக இங்கிருந்து வெளியேற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அப்போதைய ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஏப்ரல் 17, 1971ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அப்போது சிறிலங்காவில் ஜே.வி.பி கிளர்ச்சி இடம்பெற்றதால் இக்கிளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு வடகொரியா உதவுகின்றது என்கின்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிசக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஐக்கிய முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட போது இவர்களது தேர்தல் பரப்புரையில் வெளிநாட்டுக் கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக ஐக்கிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வடகொரியா மற்றும்  கிழக்கு ஜேர்மன் ஆகிய இரண்டிற்கும் ஜனநாய அடையாளம் வழங்கப்பட்டது’ என முன்னணி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கே.எம்.டீ சில்வா எழுதிய ‘சிறிலங்காவின் வரலாறு’ என்கின்ற நூலில் ‘மொழியியல் தேசியவாதம் மற்றும் ஒரு சமூக ஆராய்ச்சி’ என்கின்ற உபதலைப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவடைந்து ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று இரண்டு மாதங்களின்  பின்னர் அதாவது ஜூலை 15, 1970ல் வடகொரியா தூதரகம் கொழும்பில் திறக்கப்பட்டது. இத்தூதரகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குள் வடகொரியா தனது தூதரகத்தை மூடவேண்டும் எனவும் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டது.

ஆனாலும் அதன் பின்னரும் இவ்விரு நாடுகளிற்கு இடையிலான உறவு நிலை நீடிக்கும் என சிறிலங்காவின் அப்போதைய அரசாங்கம் அறிவித்தது.

ஜே.வி.பி கிளர்ச்சிவாதிகளுக்கு வடகொரியா உதவி செய்கின்றது என்கின்ற சந்தேகத்தின் பேரிலேயே தூதரககத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டதாக திருமதி பண்டாரநாயக்கவின் செயலராக 1970-77 வரையான காலப்பகுதியில் பணியாற்றிய M.D.D .பீரிஸ் தெரிவித்தார்.

ஜே.வி.பி கிளர்ச்சிக்கு எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின் உதவியும் பெறப்படவில்லை என விசாரணையின் போது ஜே.வி.பி தலைவர் றோகன விஜயவீர தெரிவித்ததாக 1971ல் இது தொடர்பான விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த சிறிலங்கா குற்றப் புலன் விசாரணைத் திணைக்களத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த காவற்துறைக் கண்காணிப்பாளர் உபாலி செனவிரட்ன தெரிவித்தார்.

‘ஜே.வி.பி கிளர்ச்சியில் வெளிநாட்டுத் தலையீடும் காணப்பட்டதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் விசாரணையின் போது இதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை’ என திரு.செனவிரட்ன தெரிவித்தார்.

ஜே.வி.பி கிளர்ச்சித் தலைவர்கள் மத்தியில் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஜே.வி.பி கிளர்ச்சிகளுக்கு எவ்வித வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், ‘ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்ட சில கிளர்ச்சித் தலைவர்கள் வடகொரியாவில் சில பயிற்சிகளைப் பெற்றனர். அத்துடன் வெளிநாட்டு நாணயங்களும் சிறிலங்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டு இவை கறுப்புச் சந்தைகளில் மாற்றப்பட்டு ஜே.வி.பிக்கு வழங்கப்பட்டது’ என தென்னாசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடு என்கின்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை.

தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியில் வடகொரியா ஈடுபட்டது என்பதை ஏப்ரல் 25, 1971 அன்று அப்போதைய பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவால் வழங்கப்பட்ட வானொலி விவாதத்தின் போது மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.

‘இந்த நாட்டில் செயற்பட்ட தூதரகம் ஒன்று (அவர் பெயர் குறிப்பிடவில்லை) பயங்கரவாதிகளுக்கு ஆதரவுகளை வழங்கியிருந்தது. கிளர்ச்சிவாதிகள் கிளர்ச்சிகளுக்கு தயாராவதற்கு இத்தூதரகம் பலமாக இருந்துள்ளது. இதனால் இந்தத் தூதரகத்தை உடனடியாக மூடுமாறும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் தூதுவரிடம் கேட்டிருந்தேன்’ என சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.

வடகொரியாவுடன் சிறிலங்கா நன்கு ஆலோசனை செய்யப்பட்ட வெளிநாட்டுக் கோட்பாட்டைப் பின்பற்றினால் அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவின் நிலையானது உயர்வடையும் எனவும் ஆனால் சிறிலங்காவால் அண்மையில் வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது அவசியமற்றதும் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளதாக தனது பெயரை வெளியிட விரும்பாத, சிறிலங்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி தெரிவித்தார்.

‘ஒவ்வொரு நாடும் அணுவாயுதங்கள் தொடர்பாக கவலை கொள்கின்றது. அணுவாயுதப் பரவல் தடை தொடர்பான சாசனத்தை முன்வைத்து எமது ஆதங்கங்களை நாங்கள் வெளிப்படுத்த முடியும். ஆனால் அதற்கும் அப்பால் வடகொரியாவை எச்சரிக்கும் அளவிற்கு நாம் செல்லவேண்டிய தேவையில்லை’ என குறித்த அதிகாரி தெரிவித்தார்.

கொரிய குடாநாட்டில் நிலவிய குழப்பங்களைத் தணிப்பதற்கான பணியில் சிறிலங்கா முன்னர் ஈடுபட்டதாகவும், அணிசேரா நாடுகளின் அமைப்பின் தலைமைப் பொறுப்பை சிறிலங்கா வகித்த போது கொரியாவின் சுதந்திரத்திற்காகவும் அமைதியான ஒன்றிணைவிற்கான அழைப்பையும் சிறிலங்கா விடுத்ததாகவும் கொழும்பில் 1976ல் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் அமைப்பின் ஐந்தாவது மாநாட்டின் நிறைவில் இது தொடர்பாக சிறிலங்காவின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

வழிமூலம்      – Sunday times
ஆங்கிலத்தில் – Chandani Kirinde
மொழியாக்கம் – நித்தியபாரதி

பகிரவும்...
0Shares