ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா (காணொளி)
வ/ஓமந்தை வேப்பங்குளத்தில் ரி.ஆர்.ரியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி. சிவசக்தி அருந்ததி தலைமையில் பெரியம்மா முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளின் அனுசரணையில் இந்த முன்பள்ளியானது கட்டி முடிக்கப்பட்டது.
சுமார் பத்து லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த பெரியம்மா முன்பள்ளியினை கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதேவேளை இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா, ஓமந்தை கிராம சேவையாளர் அனுஜா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் இராஜேஸ்வரன், வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் கருணாநிதி மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு பிரான்சில் இருந்து ரி.ஆர்.ரி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்கள் நேரடியாக சென்று திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்த முன் பள்ளிக்கான முழு பொருளாதார உதவியையும், பிரான்சில் வசித்து வரும் அன்ரி அம்மா மற்றும் அவர்களது பிள்ளைகள், ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக வழங்கியிருந்தார்கள்.
மேலும் முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தங்கள் வழங்கப்பட்டதுடன், ஞாபகார்த்தமாக முன்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.