Main Menu

மன்னகுளம் வள்ளுவர் முன் பள்ளி திறப்பு விழா

எமது மக்களின் சுயகௌரவ வாழ்வுக்காக புலம்பெயர் உறவுகள் தொடர்ந்தும் உதவ வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதி பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் கிராமத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும்  தெரிவித்ததாவது,

ஆரம்ப கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்க்கையில் சீவிப்பதற்கு மிகவும் அவசியமான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் போதிக்கும் முன்பள்ளி ஒன்று சுமார் இருபத்தைந்து வருடங்களாக இந்த கிராமத்து பிள்ளைகளுக்கு இல்லாததன் குறையை, அதன் தேவையை உணர்ந்து புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் வழங்கிய நிதியில் இன்று இந்த வள்ளுவர் முன்பள்ளி மிளிர்கிறது.

இந்த கிராமத்து பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் மிகுந்த கரிசனை கொண்டு வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா அவர்கள் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அந்த வானொலியின் நேயர்களான பிரான்ஸில் வசிக்கும் அன்ரனி அம்மா குடும்பத்தினரும், லண்டனில் வசிக்கும் ஜெயா மற்றும் மலேசியாவில் வசிக்கும் திருமதி உஸாராணி பூபாலன் அவர்களும் இந்த முன்பள்ளிக்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

குறித்த உறவுகளுக்கும், பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் பணிப்பாளர் சிறீரங்கன் அவர்களுக்கும், வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயா அவர்களுக்கும் மன்னகுளம் கிராமத்து முன்பள்ளி பிள்ளைகள் சார்பாகவும், கிராமத்தின் மக்கள் சார்பாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்ளுகின்றோம்.

போரால் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ள மக்களுக்கு, ஒரு வானொலி சேவையூடாக உதவ முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக நேயர்களது பல உதவித்திட்டங்கள் மூலம் இவர்கள் நிரூபித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இன்னும் எத்தனையோ பல தமிழ் கிராமங்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, வாழ்விடங்கள் என்று அடிப்படை வசதிகள் இன்றி, அரசியல் பழிவாங்கல் காரணமாக அபிவிருத்திகள் இன்றி காணப்படுகின்றன. தரையிலும் மர நிழல்களுக்கு கீழேயும் அமர்ந்து மாணவர்கள் ஆரம்ப கல்வியை கற்கும் அவலம் இன்றும் தொடர்கிறது.

இந்த அவல வாழ்வை போக்க புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இன்று போல் என்றும் உதவ வேண்டும். அங்கு நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள் பற்றி நாம் நன்கு உணர்ந்துள்ளோம். அத்தகைய இடர்நிலை சூழல்களிலும் நீங்கள் எமது மக்களின் சுயகௌரவ வாழ்வுக்காக, சுய பொருளாதார மேம்பாட்டுக்காக உங்களை வருத்தி தொடர்ந்தும் உதவுவதையிட்டு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இன்றும் கூட இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கும், வறுமையின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுள்ள எமது மக்களை நாங்களும் நீங்களுமாக சேர்ந்து வாழ வைப்போம். நம்மால் முடிந்தவரை அந்த மக்களின் மறுவாழ்வுக்காக உழைப்போம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 06.07.2014 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர் தியாகராசா, முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் ராஜேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருவரங்கன் ஆகியோரும், மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

வள்ளுவர் முன்பள்ளி கட்டடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கமும் இணைந்து திறந்து வைத்தனர்.

ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணியின் இணைப்பாளர் திருமதி அருந்ததி சிவசக்தி ஆனந்தனால் இந்த வள்ளுவர் முன்பள்ளி வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

8277106_orig 9306480_orig 6369409_orig 6105053_orig 8057368_orig 5477958_orig 3367548_orig2383962_orig 8062750_orig 2346618_orig 6317333_orig 3645376_orig9059841_orig 3941192_orig 1055440_orig 8148993_orig 3766142_orig 2419946_orig 8784010_orig
பகிரவும்...