ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் இன்று
ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் இன்றாகும்.
தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam, ஆகத்து 2, 1913 – செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார். தமிழ்க் கல்ச்சர் என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக எட்டு உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை கோலாலம்பூரில் பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே.
தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு (ஆகத்து 2, 1913) பிறந்தார். அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார்.
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்துஎன்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
*********************************************************************************************************************************************************
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் எமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்ப்னவ்ற்றை உலகிற்கு பறைசாற்றி வந்துள்ளார் என்பதை தமிழர்களாகிய நாமறிவோம்.
“தமிழ்க் கலாசாரம்” என்னும் முத்திங்கள் ஏடு
“தமிழ்க் கலாசாரம்” என்னும் முத்திங்கள் ஏடு தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வ்ந்துள்ளது. இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்வேடு உலகை வலம் வரச் செய்த பெருமை பிதா தனிநாய்கம் அடிகளாரையே சாரும். கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
சமய சமரசம் நிலவிய காலம்
தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.
அடிகளார் எழுதிய தமிழ்ப் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்
தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். ஆதிகாலம், இடைக்காலம், நவீன் காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்றதென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அர்ரய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் முன்னோடி
1966-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். பிதா தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.
காரையூர் நா பொன்னையா