இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! – பா.துவாரகன்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்! இறந்தவர்களை நிவனவு கூர்ந்து வணங்குவது மனிதாபிமானம் மிக்கததெனவே உலக நீதி கருதுகின்றது.
இந்த மனித பேரவலம் நிகழ்ந்த வன்னிப் பிரதேசத்தில் பணம் சம்பாதிக்க வந்த ஹற்றன் நசனல் வங்கியின் ஊழியர்கள் அப்பகுதி மக்களின் துயரத்தில் பங்குகொள்வது மனிதாபிமானம் மிக்க செயல், போற்றுதற்குரியது.
இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக வங்கியின் ஊழியர்களை பணிநீக்கம் செய்தமையானது நாம் எத்தகைய மனிதாபிமானம் அல்லது உயிர்வாழ்வதற்கான உரிமையுள்ள நாட்டில் வாழ்கின்றோம் என்ற சிந்தனையை மீளவும் தோற்றுவிக்கின்றது.
குறித்த வங்கியின் தலைமைப்பீடம் முகாமையாளர் ஒருவரையும் உத்தியோகத்தர் ஒருவரையும் பணிநீக்கம் செய்த பின்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையானது அது தன்னுடைய வாடிக்கையாளர்கள் தன்னைவிட்டு விலகுவதால் தனது பண வருவாய் இழப்பை தடுக்க கூறப்பட்ட போலியான காரணம் என்பதை பகுத்தறிவுள்ள எவரும் புரிந்து கொள்வது கடினமானதல்ல. இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு வேறு எதனுடனும் ஒப்பிடக் கூடியதுமல்ல. இறந்த உங்கள் தாயை அல்லது பிள்ளைகளை நினைவு கூர மறுக்கின்ற வங்கி உங்கள் பணத்தை மட்டுமே எதிர்பார்க்கின்றது.
மிகவும் எளிமையான விடயம் என்னவெனில் ஊழியர்கள் தமிழர்கள் என்றதனாலேயே இங்கே இறந்தவர்களை வணங்குவது (அஞ்சலிப்பது) இழிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன, மத, சாதி ,நிற வேறுபாடு காண்பிப்பது அறம் அன்று. எல்லா உயிர்களிடத்தும் இறைவனைக் காண்பது அறம்.
இந்த HNB வங்கி கூறும் காரணம் சரியெனில் தைப்பொங்கல், சரசுவதி பூயை முதலானவைகள் வங்கியில் செய்யத் தக்கவையல்ல. மேலும் கோலம் இட்டு குற்றுவிளக்கேற்றுவதும் குற்றச் செயல்களாகாதா? இறந்துபோன தங்கள் வங்கி ஊழியர்களின் உறவினர்களது வீடுகளுக்கு சென்று மலர் வளையம் வைத்து துயரில் பங்கு கொள்வது எல்லாம் போலியானதா?
இறந்து போன உங்களது தாயை, பிள்ளைகளை , சகோதரர்களை நினைவு கூர்வதை அவமதிக்கும் ஒரு வங்கியில் நீங்கள் பணம் வைப்பிலிடுவது , கடன் அட்டை வைத்திருப்பது வெட்கத்திற்குரியது இல்லையா?
பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பணம் தேவையென்றால் இந்த வங்கி தமிழர்கள் இருவரையும் மீள பணிக்குச் சேர்த்துக் கொள்ள முற்படும். ஆனால் இறந்து போனவர்களை நினைவு கூர்ந்ததை அவமதித்தமை, அதற்கு வியாக்கியானங்கள் கூறியமைக்கு HNB யின் தலைமை மன்னிப்புக் கேட்டாலும் தமிழர்களின் துயரம், முள்ளிவாய்க்கால் அவலம், காணாமல் போனவர்களுக்காக அழுகின்ற அன்னையிரின் அழுகுரல் தான் நின்றுவிடுமா?
” பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்; ”
“உலகத்தமிழர்கள் அனைவரும் HNB வங்கியூடான பணப்பரிமாற்றத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். வங்கியில் வைத்திருக்கின்ற அனைத்து கணக்குகளையும் மூடி பொருத்தமான வேறு வங்கியில் வைப்பிலிட வேண்டும். கடன் அட்டைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்ற பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பலர் தங்கள் கணக்குகளை மூடிவிட்டார்கள். HNB யுடன் சிறியேனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. HNB இற்கு காண்பிக்கும் எதிர்ப்பென்பது 3 தசாப்தகால யுத்தத்தில் இறந்த போன அனைத்து உறவுகளுக்கும் செய்யும் வணக்கமாகும். HNB எதிர்ப்பு என்பது தமிழர்கள் உலகில் உள்ள அனைத்து இன மனிதர்களைப் போலவும் வாழ்வதற்கான உரிமையை அறவழியில் கேட்டுக் கொள்வதாகும். இது மகாத்மா காந்தி தம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட உப்பு சத்தியாக்கிரகத்தைப் போன்றது. இது தமிழ்ச் சமுதாயத்தின் ஒர் அறக்கடன்.
HNB எதிர்ப்பு என்பது மிகவும் அடிப்படை மனிதஉரிமைக்கான மனிதத் தன்மையுள்ளவர்களின் செயற்பாடாகும். இது யாழ் நூலகம் எரிக்கப்பட்டமைக்காக வருத்தப்படும் பெரும்பான்மையின சகோதர்களின் அறம் சார்ந்த கடமையுமாகும். இதுஇவ்வுலகில் பிறந்த அனைவரும் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ள உரிமை உடையவர்கள் என்று கருதும் உலகின் அனைத்து இன மக்களதும் கடமையாகும். உலகில் மனிதத்தின்பால் கரிசனை மிக்கவர்கள் இந்தHNB எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.
பா. துவாரகன்..