Main Menu

NHSற்கு “எனது உயிரால் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்” பிரிட்டன் பிரதமர்

தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பிரதமர்  பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட கொரொனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்தமைக்காக, தேசிய சுகாதார சேவைகளுக்குத் தனது உயிரால் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இலண்டனிலுள்ள சென்.தோமஸ் மருத்துவமனையில் மூன்று இரவுகள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர், தொடர்ந்தும் சாதாரன வார்ட்டில் அங்கு தங்கியிருந்தவாறே உடல்நிலை தேறிவரும் ஜோன்சன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று  ஞாயிறன்று பிரித்தானியாவில் கொரொனாவினால் ஏற்பட்டுவரும்  உயிரிழப்பு 10,000 இனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 917 உயிரிழப்புகளுடன் மருத்துவமனைகளில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 9,875 ஆகப் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவில் வெப்ப காலநிலைச் சூழல் நிலவினாலும் கூட உயிர்த்த ஞாயிறு காலத்தில் மக்களை வீட்டில் தங்கியிருப்பதன் மூலம் வைரஸ் பரவுகையைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர்கள் வலியுறுத்திக் கேட்கின்றனர்.

பிரிட்டன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக, அல்லது குறிப்பாக  ஐரோப்பாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இருப்பதாக, விஞ்ஞான ஆராய்ச்சியில் பிரிட்டனின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமாக செயற்படும், வெல்கம் நிறுவனத்தின் இயக்குனர் ஜெரமி பரார் குறிப்பிட்டுள்ளார். இலையுதிர் காலத்திற்குள் தடுப்பூசி கிடைக்கக்கூடும், ஆனால் பல மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத் தேவையான அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்க அதிக நேரம் எடுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை அன்று அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்ததும் தான் வெளியிட்டுள்ள முதலாவது கருத்தில், மருத்துவப் பணியாளர்களுக்கு தனது நன்றி போதுமானதாக இருக்காது எனவும் தனது உயிரினாலே அவர்களுக்கான நன்றிக் கடனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஓய்வெடுக்கவும், குணமடையவும் இதிலிருந்து மீளாவும் பிரதமருக்கு நேரமும் ஓய்வும் தேவையென உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மக்கள் உயிர்த்த ஞாயிறுப் பண்டிகை வழிபாட்டை வீட்டிலிருந்து மேற்கொள்ளுமாறு, உயிர்த்த ஞாயிறுப் பண்டிகை வாழ்த்துத் தெரிவித்து பிரதமர் ஜோன்சனின் டிவிட்டர் கணக்கிலிருந்து  நாட்டு மக்களுக்கு வெளியிடப்பட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.

பகிரவும்...