இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்
மூத்த அரசியல்வாதியான பீட்டர் மாண்டல்சன் பாதுகாப்புச் சோதனைகளில் தோல்வியடைந்ததாகத் தெரியவந்ததை அடுத்து, அவரை வொஷிங்டனுக்கான தூதராக நியமித்த விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டில் உயர்மட்ட தூதரகப் பதவிக்கு மாண்டல்சன் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னணியில் வளர்ந்து வரும் கோபத்திற்கு மத்தியில், இந்த விவகாரம் பல மாதங்களாக ஸ்டார்மரை வாட்டி வதைத்து வருகிறது.
பிரதமர் ஸ்டார்மரின் ஆளும் தொழிலாளர் கட்சியில் நீண்டகால உள்வட்டத்தைச் சேர்ந்தவரான மாண்டல்சன், 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
ஆனால், தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்.
இந்த அண்மைய குளறுபடிக்கு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளே காரணம் என அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், மாண்டல்சனின் பாதுகாப்புச் சோதனை தோல்வியடைந்தது குறித்து இந்த வாரம் வரை ஸ்டார்மருக்கோ அல்லது அவரது வெளியுறவு அமைச்சருக்கோ தெரிவிக்கப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
இந்த ஊழலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்காக வியாழக்கிழமை பிற்பகுதியில் வெளியுறவு அலுவலகத்தின் உயர் அதிகாரியான ஆலி ராபின்ஸை இங்கிலாந்து அரசாங்கம் பதவி நீக்கம் செய்து, விரைவாகச் செயல்பட்டது.
இங்கிலாந்து பாதுகாப்புச் சரிபார்ப்பின் பரிந்துரைக்கு எதிராக மாண்டல்சனின் நியமனத்தை அனுமதிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முடிவு செய்ததாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.
பின்னணிப் பாதுகாப்புச் சோதனையில் தோல்வியடைந்த பின்னரும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்ற கார்டியன் நாளிதழின் ஆரம்ப அறிக்கையை அரசாங்கம் உறுதிப்படுத்தியதை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் வியாழக்கிழமை முதல் தீவிரமடைந்தன.
வொஷிங்டனுக்கான தூதர் பதவி, பிரித்தானியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் மிக முக்கியமான இராஜதந்திரப் பதவியாகக் கருதப்படுகிறது.
இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சிறப்பு உறவு என்று அழைக்கப்படுவதைப் பேணி வளர்க்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வளர்ந்து வரும் அரசியல் புயலுக்கு மத்தியில், இந்த ஊழல் காரணமாக ஸ்டார்மரின் இரண்டு முக்கிய அரசியல் உதவியாளர்கள் இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
