Main Menu

தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

தவெக நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய்யை நேற்று காலை சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

மு.வீரபாண்டியன்: தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் முன்வைத்தோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவின் தோழமை கட்சிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை.

தோழமை கட்சியாகவும் கூட்டணியில் இல்லை. மக்கள் அதிகாரத்தை ஆளுநர் கடந்து விடக்கூடாது என்கிற அரசியல் காரணங்களுக்காக வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம். தோழமை கட்சிகளுக்கு ஒரு தேநீர் விருந்து என்கிறபோது அங்கே இருக்கும் ஒரு நல்ல சூழல் கெடக்கூடாது என்பதற்காகத்தான் முதல்வரை சந்தித்தோம்.

பெ.சண்முகம்: நாங்கள் ஏற்கெனவே இந்த அரசு அமைவதற்கு வெளியிலிருந்து ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவித்து, அந்த ஆதரவு தொடரும் என்பதையும் தெரிவித்திருக்கிறோம்.

அதில் எந்தவிதமான குந்தகமும் ஏற்படாது. தேநீர் விருந்தில் கலந்து கொண்டால்தான் அது அரசை பலப்படுத்தும், இல்லாவிட்டால் அது பலவீனப்படுத்தும் என்று நாங்கள் பார்க்கவில்லை.

தவெக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து முதல்வரோ, அமைச்சர்களோ எங்களுடன் எதுவும் பேசவில்லை.

இந்த அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்ட எந்த சூழலும் தமிழகத்தில் எழவில்லை. இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.