முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தவெகவில் ஐக்கியம்
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணையும் நிலையில், ‘மனவலியுடன் விலகுவதாக’ எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைக்கின்றனர்.
அவர்களுடன் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணைகிறார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் க.ராஜசேகரன், “அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள். மக்கள் நலன் குறித்த எனது பார்வை. எதிர்கால பொது வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கனத்த இதயத்துடனும், கலங்கிய மனத்துடனும் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மகத்தான இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், இன்றைய தினம் முதல் மனவலியுடன் விலகுகின்றேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
