Main Menu

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குறிப்பாகப் பருவமழைக்காலத்திற்கு முன்னதாக, கட்டிடங்களுக்கான மூன்று நிலைகளைக் கொண்ட வண்ணக் குறியீட்டுப் பாதுகாப்பு முறையை ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

கட்டிடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மையின் அடிப்படையில் அவை சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை என வகைப்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திங்களன்று (24) சட்டமன்றில் தெரிவித்தார்.

பாடசாலை கட்டிடங்களின் நிலை மற்றும் பொதுப்பணித்துறைக்கும் பாடசாலைக் கல்வித் துறைக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவைப்படுவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலை கட்டிடங்களில் பாதுகாப்பு ஆய்வுகளை நடத்தவும், அந்த ஆய்வின் அடிப்படையில் கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த நடைமுறையின் கீழ், பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்படும் கட்டிடங்கள் ‘சிவப்புப் பிரிவு’ (Red category) பட்டியலில் சேர்க்கப்படும்.

அத்தகைய கட்டிடங்கள் கல்விச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது.

குறிப்பாக மழைக்காலம் நெருங்கி வருவதால், பாடசாலை கட்டிடங்களைப் பார்வையிட்டு அவற்றின் கட்டமைப்பு உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு பொதுப்பணித் துறை தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு கட்டிடம் பாதுகாப்பற்றது என்று கண்டறியப்பட்டால், அதிகாரிகள் உடனடியாக அதில் சிவப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி, அந்தக் கட்டிடத்திற்கு ‘சீல்’ வைப்பார்கள்.

அமைச்சரின் கூற்றுப்படி, கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவை என மதிப்பிடப்பட்ட கட்டிடங்களில் மாணவர்கள் இருப்பதைத் தடுப்பதும், பயன்பாட்டிற்கு உகந்ததல்லாத கட்டிடங்கள் குறித்துப் பாடசாலை கல்வித் துறைக்கு முறையாகத் தெரிவிப்பதை உறுதி செய்வதுமே இம்முறையின் நோக்கமாகும்.

‘மஞ்சள்’ (Yellow) வகைப்பாட்டில், உறுதித்தன்மையை நிலைநாட்ட பழுதுபார்ப்பு அல்லது பிற கட்டமைப்புப் பணிகள் தேவைப்படும் பாடசாலை கட்டிடங்கள் அடங்கும்.

தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானவை எனக் கருதப்படுவதற்கு முன்னதாக, இத்தகைய கட்டிடங்கள் சீரமைப்புப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட வேண்டும்.

உடனடி நடவடிக்கை தேவைப்படும் கட்டிடங்களை அடையாளம் காணவும், பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இவகைப்பாடு அதிகாரிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டமைப்பு ரீதியாக உறுதியானவை என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பாதுகாப்பான நிலையில் இருக்கும் என்றும் மதிப்பிடப்படும் கட்டிடங்களுக்கு ‘பச்சை நிற ஸ்டிக்கர்’ (Green sticker) வழங்கப்படும்.

எனவே, இந்தக் வண்ணக் குறியீட்டு முறை பாடசாலை கட்டிடங்களின் பாதுகாப்பு நிலை குறித்த உடனடித் தோற்றத்தை வழங்கும்.

அதேவேளையில், அதற்கான அடிப்படை உறுதித்தன்மைச் சான்றிதழ்கள் முறையான மதிப்பீட்டை வழங்கும்.

ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து, அந்தத் தரவுகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் பொதுப்பணித் துறை பகிர்ந்து கொள்ளும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த முன்னெடுப்பின் நோக்கம், பொதுப்பணித் துறைக்கும் பாடசாலை கல்வித் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு,

பாடசாலை கட்டிடங்களை மதிப்பிடுவதற்கும், பழுதுபார்ப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அதிகாரிகளுக்கு உதவுவதாகும். குறிப்பாக, கனமழையானது கட்டமைப்புப் பலவீனங்களையும் நீர்க்கசிவையும் மோசமாக்கக்கூடிய பருவமழைக் காலங்களில் இது அவசியமாகிறது.