Main Menu

சொந்த நாடு குடியுரிமையை உறுதிபடுத்தாமல் வெளிநாட்டினரை நாடு கடத்த முடியாது; மத்திய அரசு

குடியுரிமை சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டினரை, அவரது சொந்த நாடு ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நபரை நாடு கடத்த முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட நபர்கள், நாடு கடத்தப்படாமல், வடகிழக்கு மாநிலமான அசாமில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதன் விபரம்:

குடியுரிமை தெரியாத அல்லது சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டினரின் குடியுரிமையை, அந்த நபரின் சொந்த நாடு உறுதிசெய்தால் மட்டுமே அவரை நாடு கடத்த முடியும். அதேசமயம், அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருத்தல் அவசியம்; அவரின் சொந்த நாடும் அவரை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த சூழலில் மட்டுமே, அந்த நபரை நாடு கடத்த முடியும்.

குடியுரிமை சரிபார்ப்பு இல்லாமல், நாடு கடத்தும் நடைமுறையை தொடங்க முடியாது. ஒருவரை நாடு கடத்துவதற்கு முன், குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறை மூலம் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்திடம் இருந்து தேவையான பயண ஆவணத்தை பெறுவது மிகவும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கூற்றுப்படி, ஒரு வெளிநாட்டினர் தண்டனை காலம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின், அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்து, அவர் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் அவரை நாடு கடத்தலாம். அதற்கு அந்த நபரின் சொந்தநாட்டின் ஒப்புதலும் தேவை.